உள்ளாட்சித் தேர்தல் தேதி அறிவிக்கப்பட்டுள்ள நிலையில், பொங்கல் பரிசு வழங்க தடையில்லை என மாநில தேர்தல் ஆணையம் அறிவித்துள்ளது.
 
பொங்கல் பண்டிகையையொட்டி தமிழகத்தில் கடந்த ஆண்டு பொங்கல் பரிசு தொகுப்புடன் 1,000 ரூபாய் வழங்கப்பட்டது போல இந்த ஆண்டும் குடும்ப அட்டைதாரர்களுக்கு பச்சரிசி, சர்க்கரை, 2 அடி நீள கரும்புதுண்டு, 20 கிராம் முந்திரி, 20 கிராம் திராட்சை, 5 கிராம் ஏலக்காய் மற்றும் ரொக்கப்பணம் 1,000 ரூபாய் வழங்கப்படும் என முதல்வர் பழனிச்சாமி அறிவித்திருந்தார். இதற்காக 2.05 கோடி குடும்ப அட்டைதாரர்களுக்கு பொங்கல் பரிசு தொகுப்பு வழங்குவதற்கு அரசாணை வெளியிடப்பட்டது.

இந்நிலையில், தமிழகத்தில் புதிதாக பிரிக்கப்பட்ட 9 மாவட்டங்களை தவிர்த்து பிற மாவட்டகளில் டிசம்பர் 27 மற்றும் 30-ம் தேதிகளில் 2 கட்டமாக தேர்தல் நடைபெறும் என அறிவிக்கப்பட்டுள்ளது. உள்ளாட்சி தேர்தலுக்கு டிசம்பர் 9-ம் தேதி அன்று முதல் 16-ம் தேதி வரை வேட்புமனு தாக்கல் நடைபெறும், 17-ம் தேதியன்று வேட்பு மனு மீது பரீசிலனை நடைபெறும். வேட்புமனுக்களை திரும்ப பெற 19-ம் கடைசி நாளாகும். உள்ளாட்சி தேர்தல் முடிவுகள் ஜனவரி 2-ம் தேதி வெளியிடப்படும் என தேர்தல் ஆணையர் பழனிசாமி தெரிவித்துள்ளார். 

இதனிடையே, பொங்கல் பரிசு தொடர்பாக செய்தியாளர்கள் கேள்வி எழுப்பினர். அதற்கு பதிலளித்த அவர் பொங்கல் பரிசுத் தொகை ஏற்கனவே வழங்கப்பட்டுள்ளதால் தற்போது வழங்க தடையில்லை எனவும் விளக்கமளித்துள்ளார்.