ரவுடி கும்பலில் சேர மறுத்ததால் முகேஷை துப்பாக்கியால் சுட்டு கொன்றேன் என கைதான விஜய் போலீசாரிடம் பரபரப்பு வாக்குமூலம் அளித்துள்ளது அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது. 

சென்னை தாம்பரம் அருகே உள்ள வேங்கடமங்கலம் கிராமத்தை சேர்ந்தவர் ஷோபனா. இவரது மகன் முகேஷ்குமார் (19) பாலிடெக்னிக் மாணவன். இவர், கடந்த 4-ம் தேதி தனது நண்பன் விஜய் வீட்டுக்கு சென்றுள்ளார். அங்கு துப்பாக்கியால் சுடப்பட்டு முகேஷ்குமார் இறந்து கிடந்தார். இதனையடுத்து, செங்கல்பட்டு நீதிமன்றத்தில் அந்த இளைஞர் சரணடைந்தார். அப்போது, விளையாட்டாக சுட்டதாகவும், அதில் நெற்றியில் குண்டு பாய்ந்து இறந்துவிட்டதாகவும் விஜய் கூறினார்.

இதுதொடர்பாக வழக்கில் போலீசார் விஜய்யை கைது செய்து கடந்த 2 நாட்களாக போலீஸ் காவலில் வைத்து விசாரித்து வருகின்றனர். அவரிடம் போலீசார் நடத்திய விசாரணையில், பல திடுக்கிடும் தகவல்கள் வெளியாகியுள்ளது. அதில், விஜய்யின் உறவினரும் அதிமுகவை சேர்ந்த வேங்கடமங்கலம் ஊராட்சி முன்னாள் தலைவருமான ரவியை கொல்ல அவரது எதிரிகள் பெட்ரோல் குண்டு வீசினர். இதில் அவர் உயிர் தப்பிவிட்டார்.  இதனால் அவர் பெருமாட்டுநல்லூரை சேர்ந்த செல்வம் என்ற ரவுடி கும்பலை தனக்கு பாதுகாப்பாக வைத்துக்கொண்டார். ரவியின் மகன்கள் இருவரும் ஒரு குரூப்பை அமைத்து தந்தைக்கு பாதுகாப்பாகவும் கும்பல் தலைவன் செல்வத்துக்கு ஆதரவாகவும் இருந்துள்ளனர். குரூப்பில் விஜய் இருந்துள்ளார்.

இதில் செல்வம் கொடுத்ததாக கூறி துப்பாக்கியை ரவியின் மகன்கள் விஜய்யிடம் கொடுத்து வைத்துள்ளனர். இந்த துப்பாக்கியை விஜய் தனது நண்பன் முகேஷிடம் காட்டியுள்ளார். மேலும் தன்னுடன் சேர்ந்து ரவுடி கும்பலுடன் சேர்ந்தால் பல விஷயங்களை தைரியமாக செய்யலாம் என விஜய் ஆசை கூறியுள்ளார். அப்போது, குடும்ப சூழ்நிலை கருத்தில் கொண்டு முகேஷ் மறுத்துள்ளார். ஆனால், விடாமல் செல்வம் குரூப்பில் சேருமாறு மிரட்டி உள்ளார். 

இதனால், ஆத்திரமடைந்த விஜய், முகேஷின் நெற்றி பொட்டில் வைத்து துப்பாக்கியால் சுட்டுள்ளார். குண்டு தலையின் பின் பக்கமாக வெளியேறியது. அதிர்ச்சி அடைந்த விஜய் துப்பாக்கியுடன் தப்பியோடிவிட்டார். பின்னர் துப்பாக்கியை நல்லம்பாக்கம் கல் குவாரியில் வீசிவிட்டு தப்பிச்சென்றதாக கூறியுள்ளார். இவ்வாறு விசாரணையில் தெரியவந்துள்ளது. அவரிடம் மேலும், உண்மைகளை கண்டறிய போலீசார் தீவிர விசாரணை மேற்கொண்டனர்.