கோவை எஸ்.பி பாண்டியராஜன் மீது நீதிமன்ற உத்தரவுபடி அரசு நடவடிக்கை எடுக்கலாம் என தமிழக தலைமை தேர்தல் அதிகாரி சத்யபிரதா சாஹு அதிரடியாக உத்தரவிட்டுள்ளார்.

பொள்ளாச்சி விவகாரத்தில் புகார் தந்த பெண்ணின் அடையாளத்தை வெளியிட்டதாக கோவை எஸ்.பி பாண்டியராஜன் மீது புகார் அளிக்கப்பட்டது. இதையடுத்து அவர் மீது நடவடிக்கை எடுக்க உயர்நீதிமன்ற மதுரை கிளை உத்தரவிட்டிருந்தது. அதற்கான அனுமதியை தேர்தல் ஆணையம் தற்பொழுது வழங்கியுள்ளது. பொள்ளாச்சி பாலியல் விவகாரம் தொடர்பாக பல்வேறு கண்டனங்களும், விமர்சனங்களும் எழுந்து வருகின்றன. 

மேலும் எஸ்.பி. பாண்டியராஜன் அளித்த பேட்டியில், பொள்ளாச்சி பாலியல் வழக்கில் தொடர்புடைய 4 பேர் மீது குண்டர் சட்டத்தில் நடவடிக்கை எடுக்கப்படும். மாணவிகள் பாலியல் வன்கொடுமை விவகாரத்தில் அரசியல் தொடர்பு எதுவும் இல்லை எனவும் விசாரணை தொடங்குவதற்கு முன்பாகவே அவர் தெரிவித்திருந்தார் குறிப்பித்தக்கது. 

அதில் குறிப்பாக எஸ்.பி பாண்டியராஜன் பாதிக்கப்பட்ட பெண்ணின் பெயரை வெளியிட்டார். இது கண்டிக்கத்தக்க விஷயம் என்றும் மேலும் அவர் மீது நடவடிக்கை எடுக்கப்பட வேண்டும் எனவும் மதுரை உயர்நீதிமன்ற கிளையில் வழக்கு தொடரப்பட்டது. இந்த வழக்கை விவசாரித்த நீதிமன்றம், இது தொடர்பாக துறை ரீதியாக நடவடிக்கை எடுக்கலாம் என தெரிவிக்கப்பட்டிருந்தது. ஆனால் தற்போது மக்களவை தேர்தலுக்கான நடத்தையின் விதிமுறைகள் அமலில் இருப்பதால், தமிழக தலைமை தேர்தல் அதிகாரி சாஹு அனுமதி கொடுப்பாரா? என்ற கேள்வி எழுந்தது. 

இது தொடர்பாக பேசிய சத்யபிரதா சாஹு எஸ்.பி.பாண்டியராஜன் மீது அரசு எந்த வித நடவடிக்கை வேண்டுமானாலும் எடுக்கலாம் என தெரிவித்தார். மேலும் அந்த நடவடிக்கை தொடர்பான அறிக்கையை மட்டும் தேர்தல் ஆணையத்திற்கு வழங்கினால் போதும் என கூறியுள்ளார்.