நெருங்கும் தீபாவளி பண்டிகை... சென்னையில் பலப்படுத்தப்பட்ட போலீஸ் பாதுகாப்பு!!
தீபாவளி பண்டிகையை முன்னிட்டு சென்னை முழுவதும் சுமார் 18 ஆயிரம் போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டுள்ளனர்.
தீபாவளி பண்டிகையை முன்னிட்டு சென்னை முழுவதும் சுமார் 18 ஆயிரம் போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டுள்ளனர். தீபாவளி பண்டிகையை முன்னிட்டு, சென்னையில் பணிபுரியும் மக்கள் தங்கள் சொந்த ஊர்களுக்கு படையெடுத்துள்ளனர். உள்ளூர் வாசிகள் புத்தாடைகள் மற்றும் பொருட்கள் வாங்குவதற்கு கடைத்தெருக்களுக்கு சென்று வருகின்றனர். இதனால் பேருந்து நிலையம், கடைத்தெருக்களில் அதிகளவில் பொதுமக்கள் கூடுகின்றனர். இதனால் குற்றச்சம்பவங்கள் எதும் நடைபெறாமல் இருக்கவும் மக்களின் நலனை கருத்தில் கொண்டு, சென்னை காவல்துறை சார்பில், பல்வேறு பாதுகாப்பு ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளது. அதன்படி தி.நகர், பாண்டிபஜார், புரசைவாக்கம், மயிலாப்பூர், பூக்கடை, வண்ணாரப்பேட்டை, கோயம்பேடு ஆகிய பகுதிகளில் பொதுமக்களின் பாதுகாப்புக்காக கூட்ட நெரிசலை கட்டுப்படுத்துதல், குற்ற தடுப்பு முறைகள், போக்குவரத்தை நெரிசல் ஏற்படாமல் வாகனங்களை ஒழுங்குப்படுத்துதல் போன்ற பணிகள் மேற்கொள்ளப்படுகிறது.
இதையும் படிங்க: பரனூர் சுங்கச்சாவடியில் அணிவகுத்து செல்லும் பேருந்துகள்; நெரிசல் இருந்தால் சுங்கவரி இல்லையாம்!!
சென்னையில் பொதுமக்கள் அதிகளவு கூடும் இடங்களிலும் சட்டம், ஒழுங்கு, குற்றப்பிரிவு, போக்குவரத்து, ஆயுதப்படை, தமிழ்நாடு சிறப்பு காவல் படை மற்றும் ஊர்க்காவல் படை வீரர்கள் என சுமார் 18,000 காவல் அதிகாரிகள் மற்றும் போலீசாரை கொண்டு, மேற்கூறிய 3 பாதுகாப்பு அம்சங்களுடன் கூடுதல் கவனங்களுடன் பணிகள் மேற்கொள்ளப்பட்டு வருகிறது. மேலும் தி.நகர், வண்ணாரப்பேட்டை, புரசைவாக்கம், பூக்கடை ஆகிய 4 இடங்களிலும் 16 தற்காலிக கண்காணிப்பு கோபுரங்கள் அமைக்கப்பட்டு, போலீசார் சுழற்சி முறையில் பணியமர்த்தப்பட்டு, நேரடியாகவும், பைனாகுலர் மூலமும் கண்காணித்து வருகின்றனர்.
இதையும் படிங்க: சார்பதிவாளர் அலுவலகங்களுக்கு நாளை விடுமுறை... வணிகவரி மற்றும் பதிவுத்துறை அறிவிப்பு!!
இதுமட்டுமின்றி தி.நகர் பகுதியில் 17 போலீசார் தங்களது சீருடையில் கேமராக்கள் பொருத்தப்பட்டு, குற்றவாளிகள் நடமாட்டம் மற்றும் குற்ற செயல்கள் நடவாமல் கண்காணித்து வருகின்றனர். மேலும் போலீசார் ஒலி பெருக்கிகள் மூலம் திருட்டு குற்றங்கள் நிகழாமல் தடுக்கும் அறிவுரைகளையும், செல்போன், பணம், நகைகள் மற்றும் உடைமைகளை பாதுகாத்து கொள்ளும் வழிமுறைகள் குறித்தும் தொடர்ந்து அறிவுறுத்தி வருகின்றனர். தி.நகர், வண்ணாரப்பேட்டை மற்றும் பூக்கடை பகுதியில், வாகனங்கள் செல்ல இயலாத இடங்களிலும், கூட்ட நெரிசலான இடங்களிலும் 5 டிரோன் கேமராக்கள் மூலம் கண்காணித்து குற்ற நிகழ்வுகள் நடக்காதவாறு கண்காணித்து வருகின்றனர்.