தமிழகத்தில் முதன் முறையாக கொரோனா வைரஸால் சென்னையைச் சேர்ந்த காவல் ஆய்வாளர் உயிரிழந்துள்ளார்.


தமிழகத்தில் நாளுக்கு நாள் கொரோனாவின் பாய்ச்சல் வேகம் பிடித்துள்ளது. தினந்தோறும் கொரோனாவால் பாதிக்கப்படுவோர் எண்ணிக்கை அதிகரித்தவண்ணம் உள்ளது. தமிழகத்தில் இன்று ஒரே நாளில் மட்டும் 2,094 பேர் கொரோனாவால் பாதிக்கப்பட்டுள்ளனர். இதேபோல வெளி மாநிலங்கள், நாடுகளில் இருந்து தமிழகம் திரும்பிய 80 பேருக்குக் கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டது. எனவே தமிழகத்தில் ஒட்டுமொத்தமாக ஒரே நாளில் 2,174 பேருக்கு தொற்று பாதிப்பு கண்டறியப்பட்டுள்ளது. தமிழகத்தில் மொத்த பாதிப்பு 50 ஆயிரத்து 193 ஆக அதிகரித்துள்ளது.


கொரோனா பாதிப்புக்கு பொதுமக்கள் மட்டுமல்லாமல், மருத்துவர்கள், செவிலியர்கள், மக்கள் பிரதிநிதிகள் எனப் பலரும் கொரோனா தாக்குதலுக்கு பலியாகியுள்ளனர். இந்நிலையில் கொரோனாவால் பாதிக்கப்பட்ட சென்னை மாம்பலம் காவல் நிலைய சட்ட ஒழுங்கு ஆய்வாளர் பாலமுரளி, சிகிச்சை பலன் அளிக்காமல் இன்று மாலை உயிரிழந்தார். அவருக்கு வயது 47தான். பொது முடக்கம் அறிவிக்கப்பட்ட நாளிலிருந்து முழுமையாகப் பணியில் இருந்தார். கொரோனாவால் பாதிக்கப்பட்டவர்களுக்கு இல்லத்தினருக்கு உதவியும் செய்துவந்தார். கடந்த 5-ம் தேதி கொரோனாவால் அவர் பாதிக்கப்பட்டது உறுதியானது. இரு நாட்கள் வீட்டில் தனிமையில் இருந்த அவர், பாதிப்பு அதிகமானதால் சென்னை ராஜீவ் காந்தி அரசு பொது மருத்துவமனையில் சேர்க்கப்பட்டார்.


கடந்த 11ம் தேதி அவருடைய உடல்நிலை மேலும் மோசமானதால் மாநகர காவல் ஆணையர் ஏ.கே.விஸ்வநாதன், தனது சொந்த பணமான 2.25 லட்சம் ரூபாயை செலவில்  தடுப்பூசிகளை வரவழைத்து சிகிச்சை அளிக்க உதவினார். கடந்த ஓரிறு நாட்களாக பாலமுரளி  தேறிவந்த நிலையில், திடீரென இன்று காலை அவருடைய உடல் பாதிப்பு தீவிரமானது. செயற்கை சுவாசம் பொருத்தும் அளவுக்கு சென்றது. உடல்நிலை மோசம் அடைந்ததால், பாலமுரளிக்கு அளிக்கப்பட்ட சிகிச்சை பலன் அளிக்காமல் உயிரிழந்தார்.

 
தமிழகத்தில் கொரோனா வைரஸ் பாதிப்பால் முதன் முதலாக பலியான காவல் ஆய்வாளர் இவர்தான். இவருடைய மறைவு காவல் துறையினர் இடையே பெரும் அதிர்ச்சியையும் சோகத்தையும் ஏற்படுத்தியுள்ளது. பாலமுரளியின் மறைவுக்கு தமிழக முதல்வர் எடப்பாடி பழனிச்சாமி இரங்கல் தெரிவித்துள்ளார். அவருடைய குடும்பத்தைச் சேர்ந்த ஒருவருக்கு தகுதியின் அடிப்படையில் அரசு வேலை வழங்கவும் முதல்வர் உத்தரவிட்டுள்ளார்.