கொரோனா வைரஸ் வேகமாக பரவுவதை தடுக்கும் வகையில் மக்கள் சமூக விலகலை கடைபிடிப்பதை வலியுறுத்தி இந்தியா முழுவதும் தற்போது 21 நாட்கள் ஊரடங்கு அமலில் இருக்கிறது. தமிழகத்திலும் ஊரடங்கு உத்தரவு கடுமையாக பின்பற்றப்பட்டு வருகிறது. இந்தநிலையில் ஊரடங்கு உத்தரவை மீறி சாலைகளில் செல்பவர்களை காவல்துறையினர் சரமாரியாக தாக்கும் காணொளிகள் சமீப நாட்களாக வெளி வந்த வண்ணம் இருக்கிறது.

சென்னையில் பணி முடித்துவிட்டு வந்த மருத்துவர் ஒருவரை காவல் ஆய்வாளர் கேள்வி கேட்காமல் லத்தியால் அடிப்பதும் பின் அவர் மருத்துவர் என்று சொன்னபிறகு 'முதலிலேயே சொல்லியிருக்க வேண்டியது தானே' என்று கூறிய வீடியோ சமூக வலைதளங்களில் வைரலாக பரவியது. இதற்கு பல்வேறு தரப்பில் இருந்தும் கடும் கண்டனங்கள் எழுந்த வண்ணம் இருக்கின்றன. காவல்துறையினரின் நடவடிக்கையால் அத்தியாவசிய பொருட்கள் வாங்க வெளிவரும் மக்கள் கூட அச்சத்தில் இருக்கின்றனர். இதனிடையே சென்னை பூக்கடை துணை கமிஷனர் ராஜேந்திரன் நேற்று காவலர்களுக்கு மக்களை தாக்க கூடாது என அறிவுரை வழங்கி இருக்கிறார். 

image

அவர் பேசும் போது வாகன சோதனையில் ஈடுபடும் காவலர்கள் யாரும் கையில் லத்தி வைத்திருக்கக்கூடாது என்றும் மக்களை அடித்து துன்புறுத்த கூடாது எனவும் தெரிவித்துள்ளார். காவலர்களின் நோக்கம் குற்றவியல் நடைமுறைச் சட்டமான 144 தடை உத்தரவை மக்களுக்கு புரியவைப்பதே அன்றி அவர்களைத் தாக்குவது துன்புறுத்துவது கிடையாது. தற்போதைய நிலையில் சட்டம் ஒழுங்குக்கு எந்த பாதிப்பும் ஏற்படாத போது மக்களை தாக்கி தேவையற்ற அவப்பெயரை காவலர்கள் ஏற்படுத்தக்கூடாது என்று எச்சரித்திருக்கிறார். 

image

விதிகளை மீறி வெளி வரும் மக்களிடம் அவ்வாறு செய்வதால் என்ன பாதிப்பு ஏற்படுகிறது என்பதை விளக்க வேண்டும் என்றும் அத்தியாவசியம் எது அத்தியாவசியம் இல்லாத அவை எவை என்பதை காவலர்கள் முதலில் புரிந்துகொள்ள வேண்டும் எனவும் அவர் கூறியுள்ளார். வாகன சோதனையின்போது காவலர்கள் தங்கள் பொது அறிவைப் பயன்படுத்த வேண்டும் என்று கூறியிருக்கும் ராஜேந்திரன் பிரச்சினைகள் தொடர்பாக அவ்வபோது உயர் அதிகாரிகளுடன் ஆலோசனை பெற வேண்டும் என அறிவுறுத்தி இருக்கிறார்.