தந்தையோடு இரு சக்கர வாகனத்தில் ஹெல்மெட் அணிந்து பயணித்த சிறுவனை சென்னை மாநகர காவல் ஆணையர் விஸ்வநாதன் நேரில் அழைத்து பாராட்டினார்.
இரு சக்கர வாகனத்தில் செல்வோர் கட்டாயம் ஹெல்மெட் அணிய வேண்டும் என்று சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவிட்டது. வாகனத்தின் பின் சீட்டில் உட்கார்ந்து செல்வோரும் ஹெல்மெட் அணிய வேண்டும் என்று உத்தரவிட்டுள்ளது. இந்த உத்தரவைப் பின்பற்றாதோர் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று போலீஸாருக்கு உயர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. ஆனால், இருசக்கர வாகன ஓட்டிகள் ஹெல்மெட் அணிவதில் மெத்தனம் காட்டிவருகிறார்கள்.


எத்தனை விழிப்புணர்வு செய்தாலும் அதை பெரிதாகக் காதில் போட்டுக்கொள்வதில்லை. இதற்கிடையே புதிய மோட்டார் வாகன சட்டத்தின்படி அபராத  தொகை பல மடங்கு அதிகரித்துள்ளது. இதற்கு பயந்தாவாது வாகனஓட்டிகள் ஹெல்மெட் அணிவார்கள் என்று எதிர்பார்க்கப்படுவருகிறது. இந்நிலையில் ஹெல்மெட் அணிவது தொடர்பாக ஏதாவது ஒரு வகையில் விழிப்புணர்வையும், உதாரணமாக திகழும் வாகன ஓட்டிகளை போலீஸார் பாராட்டுவதும் அவ்வப்போது நடைபெற்றுவருகிறது.


அதுபோன்ற ஓர் உதாரண சம்பவம் நேற்று நடைபெற்றது. தன் தந்தையோடு இரு சக்கர வாகனத்தில் பயணித்த சிறுவன் சிறிய ரக ஹெல்மெட்டை தலையில் அணிந்து சென்றான். இதைக் கவனித்த போக்குவரத்து போலீஸார், அவரைப் பாராட்டி தொடர்பு எண்ணை வாங்கி வைத்துக்கொண்டனர். இந்தத் தகவல் மாநகர காவல் ஆணையரின் கவனத்துக்கு சென்றது. இதையடுத்து தந்தையையும் மகனையும் அலுவலகம் அழைத்து வர காவல் ஆணையர் விஸ்வநாதன் உத்தரவிட்டார். அவர்களை நேரில் பாராட்டினார் காவல் ஆணையர். சிறுவனை தூக்கி வைத்துக்கொண்டும் பாராட்டி மகிழ்ந்தார்.
4 வயது சிறுவனுக்கும் ஹெல்மெட் வாங்கி அணிவித்து மற்றவர்களுக்கு உதாரணமாக திகழ்ந்ததற்காக தந்தையையும் காவல் ஆணையர் விஸ்வநாதன் பாராட்டினார்.