தெலுங்கானாவைச் சேர்ந்தவர் பிரியங்கா ரெட்டி(27). கால்நடை மருத்துவரான இவர் கடந்த வாரம் பெங்களூரு-ஹைதராபாத் தேசிய நெடுஞ்சாலையில் முற்றிலும் எரிக்கப்பட்ட நிலையில் பிணமாக கண்டெடுக்கப்பட்டார். பாலியல் வன்புணர்வுக்கு உட்படுத்தப்பட்டு கொடூரமான முறையில் பிரியங்கா ரெட்டி கொலைசெய்யப்பட்ட சம்பவம் நாடு முழுவதும் கடும் அதிர்வலைகளை ஏற்படுத்தி இருக்கிறது.

பெண்களுக்கு எதிராக நாளுக்கு நாள் அதிகரித்து வரும் பாலியல் ரீதியான துன்புறுத்தல்களை கட்டுப்படுத்த கடுமையான நடவடிக்கை எடுக்கப்பட வேண்டும் அனைத்து தரப்பினரும் கோரிக்கை விடுத்து வருகின்றனர். இந்த நிலையில் பெட்ரோல் நிலையங்களில் பாட்டிலில் பெட்ரோல் வழங்கப்பட கூடாது என முடிவெடுக்கப்பட்டுள்ளது.

பெட்ரோல் நிலையங்களில் இனி வாகனங்களுக்கு மட்டுமே பெட்ரோல் போட வேண்டும் எனவும் பாட்டில்களில் விற்பனை செய்ய வேண்டாம் என்று தமிழ்நாடு மாநில பெட்ரோல் விற்பனையாளர்கள் சங்கம் முடிவெடுத்திருக்கிறது. இதுதொடர்பாக அனைத்து மாவட்ட பெட்ரோல் நிலையங்களும் அறிவுறுத்தப்பட்டுள்ளதாகவும் நிர்வாகிகள் தகவல் தெரிவிக்கின்றனர். விற்பனையாளர்களின் இந்த முடிவால் வாகன ஓட்டிகள் அதிர்ச்சி அடைந்துள்ளனர். எங்காவது பெட்ரோல் இல்லாமல் வாகனம் நின்று, அருகில் பெட்ரோல் நிலையங்கள் இல்லை என்றால் என்ன செய்வது என அவர்கள் கேள்வி எழுப்பி வருகின்றனர்.