சவுதி அரேபியாவில் இருக்கும் எண்ணெய் ஆலைகள் கடந்த சில நாட்களுக்கு முன்னர் தாக்கப்பட்டன. இதனால் சர்வதேச சந்தையில் கச்சா எண்ணெய் விலை தாறுமாறாக அதிகரித்தது. இதன் எதிரொலியாக இந்தியாவில் பெட்ரோல் மற்றும் டீசல் விலை ஏற்றத்தில் இருந்து வந்தது. ஐந்து ரூபாயிலிருந்து ஆறு ரூபாய் வரையில் இந்தியாவில் பெட்ரோல் மற்றும் டீசல் விலை உயரக்கூடும் என்று கூறப்பட்டு வந்தது.

இந்தநிலையில் சில நாட்களாக அதிகரித்து வந்த விலை கடந்த மூன்று நாட்களாக குறைந்து காணப்பட்டது. இன்று தொடர்ந்து நான்காவது நாளாக மீண்டும் விலை குறைந்துள்ளது.

சென்னையில் பெட்ரோல் லிட்டர் ஒன்றுக்கு நேற்றைய விலையில் இருந்து 16 காசுகள் குறைந்து ரூ.76.74க்கு விற்பனை செய்யப்படுகிறது.  டீசல் 13 காசுகள் குறைந்து ரூ.70.81க்கு விற்பனை செய்யப்பட்டு வருகிறது.

முன்னதாக சர்வதேச சந்தையில் கச்சா எண்ணெய் விலை ஏற்றத்திற்கு ஏற்ப பெட்ரோல் மற்றும் டீசல் விலை மாதம் இருமுறை நிர்ணயிக்கப்பட்டு வந்தது. அந்த முறை மாற்றப்பட்டு தினந்தோறும் விலையை நிர்ணயித்து விற்பனை செய்ய எண்ணெய் நிறுவனங்களுக்கு கடந்த ஆண்டு மத்திய அரசு அனுமதி வழங்கியது குறிப்பிடத்தக்கது.