செமஸ்டர் கட்டணம் செலுத்தாத மாணவர்களின் பெயர் கல்லூரியிலிருந்து நிரந்தரமாக நீக்கப்படும் என அண்ணா பல்கலைக்கழகம் எச்சரிக்கை விடுத்துள்ளது. 

கொரோனா பரவல் காரணமாக கடந்த 4 மாதங்களாக கல்லூரிகள் மூடப்பட்டுள்ளன. இந்த சூழ்நிலையில் கொரோனா பரவல் காரணமாக இறுதியாண்டு தவிர்த்து கலை அறிவியல் மற்றும் பொறியியல் கல்லூரி மாணவர்களின் இளநிலை மற்றும் முதுநிலை மாணவர்களுக்கான செமஸ்டர் தேர்வுகள் ரத்து செய்யப்பட்டன.


இந்நிலையில், அண்மையில் அண்ணா பல்கலைக்கழகம் உத்தரவு ஒன்றை பிறப்பித்தது அதில் இறுதியாண்டு மாணவர்கள் உட்பட அனைத்து மாணவர்களும் தேர்வு கட்டணம் செலுத்த வேண்டும் என உத்தரவு பிறப்பித்தது. நடத்தாத தேர்வுக்கு மாணவர்களை கட்டணம் செலுத்த வேண்டும் என்கிற உத்தரவு சர்ச்சையை ஏற்படுத்தியது. இதற்கு அரசியல் தலைவர்களும் கண்டனம் தெரிவித்திருந்திருந்தனர். 

இந்நிலையில், அண்மையில் அண்ணா பல்கலைக்கழகம் மாணவர்களுக்கு சுற்றிக்கை ஒன்றை அனுப்பியுள்ளது. அதில், செமஸ்டர் கட்டணத்தை செலுத்தாத மாணவர்களின் பெயர்களை நிரந்தரமாக நீக்கப்படும் என தெரிவித்துள்ளது. குறிப்பாக செப்டம்பர் 5ம் தேதிக்குள் மாணவர்கள் அந்த செமஸ்டருக்கான கட்டணத்தை செலுத்த வேண்டும். தவறும் பட்சத்தில் மாணவர்களுடைய பெயர்கள் கல்லூரியில் இருந்து 7ம் தேதியன்று நீக்கப்படும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. 

ஏற்கனவே கல்லூரிகள் மாணவர்களிடம் கட்டணத்தை நிர்பந்தித்து பெறக்கூடாது என்று அரசு உத்தரவு இருக்கக்கூடிய சூழ்நிலையில் அரசு கட்டுபாட்டில் இருக்கக்கூடிய அண்ணா பல்கலைக்கழகம் இப்படி ஒரு உத்தரவை பிறப்பித்துள்ளது மாணவர்கள் மத்தியில் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. மாணவர்கள் பல்கலைக்கழக துணைவேந்தர் மற்றும் பதிவாளருக்கு இது தொடர்பாக கடிதங்களிலும் அனுப்பி இருக்கிறார்கள். ஆனால், இதுவரை எந்த பதிலும் மாணவர்களுக்கு கிடைக்காததால் கல்வி கட்டணத்தை செலுத்தாத மாணவர்கள் நிலை என்னவாகும் என்பது தற்போது கேள்விக்குறியாகியுள்ளது.