தலைவர்களின் சிலைகளை சேதப்படுத்தும் சமூக விரோதிகள் மீது கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என டிஜிபி திரிபாதி எச்சரிக்கை விடுத்துள்ளார்.

துக்ளக் விழாவின் ஆண்டு விழாவில் பேசிய ரஜினியின் பெரியார் குறித்த கருத்து பெரும் சரச்சையை ஏற்படுத்தியது. இதற்கு அரசியல் தலைவர்கள் பலரும் கண்டனங்களும், ஆதரவும் தெரிவித்து வருகின்றனர். ஆனால், ரஜினி தான் கூறிய கருத்தில் இருந்து பின் வாங்கப்போவதில்லை எனவும் மன்னிப்பும் கேட்க முடியாது என திட்டவட்டமாக தெரிவித்துவிட்டார்.

இதனிடையே, தமிழகத்தில் உள்ள ஒட்டுமொத்த வாக்குகள் பெரியார் ஆதரவாளர்கள் மற்றும் கடவுள் ஆதரவாளர்கள் என்று இரண்டாகப் பிரிந்து, கடவுள் நம்பிக்கை உள்ளவர்கள் அனைவரும் ரஜினியை ஆதரிக்க தொடங்கிவிட்டதால் அதிமுக அமைச்சர்களும், திமுக தலைவர்களும் ரஜினி குறித்து பல விமர்சனங்களை முன்வைத்து வருகின்றனர். 

இந்நிலையில், காஞ்சிபுரம் சாலவாக்கம் அருகே பெரியார் சிலை இன்று உடைக்கப்பட்டது. சேதமடைந்த பெரியாரின் கை மற்றும் முகம் முதலிய பாகங்கள் வெள்ளைத் துணியால் கட்டப்பட்டுள்ளது. அவற்றை சீரமைக்கும் பணிகள் வேகமாக நடைபெற்று வருகிறது. பெரியார் சிலை உடைக்கப்பட்டதற்கு அரசியல் கட்சி தலைவர்கள் கண்டனம் தெரிவித்து வருகின்றனர். மேலும், பெரியார் சிலையை சேதப்படுத்திய மர்ம நபர்கள் குறித்து காவல்துறையினர் விசாரணை செய்து வருகின்றனர்.

இந்நிலையில், பெரியார் உள்ளிட்ட தலைவர்களின் சிலைகளைச் சேதப்படுத்தும் சமூக விரோதிகள் மீது கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என்று தமிழக டிஜிபி திரிபாதி எச்சரிக்கை விடுத்துள்ளார். மேலும் பெரியார் சிலையை சேதப்படுத்திய நபர்களை கண்டறிந்து கடும் நடவடிக்கை எடுக்கவும் டிஜிபி உத்தரவிட்டுள்ளார்.