பிளாஸ்டிக் பொருள்களின் பயன்பாட்டால் சர்வதேச அளவில் சுற்றுச்சுழல் அதிகமாக மாசு அடைந்து வருகிறது. இதை தடுக்க உலக நாடுகள் பல்வேறு நடவடிக்கைகள் எடுத்து  வருகின்றன. இந்தியாவிலும் மத்திய, மாநில அரசுகள் பல திட்டங்களை செயல்படுத்தி வருகிறது.

சென்னையில் பிளாஸ்டிக் பொருட்களை ஒழிப்பதற்காக மாநகராட்சி சார்பாக அறிக்கை வெளியிடப்பட்டுள்ளது. அதன்படி பிளாஸ்டிக் பொருள்களின் மீது  மக்க கூடியது, மக்காதது, மறுசுழற்சி செய்ய கூடியது என கட்டாயம் அச்சிடப்பட்டிருக்க வேண்டும். அவ்வாறு அச்சிட தவறினால் ஆயிரம் ரூபாய் வரை அபராதம் விதிக்கப்படும்.

அதே போல தனி நபர்கள் தங்கள் இல்லங்களில் பிளாஸ்டிக்கை எரித்தால் 1000 ரூபாய் அபராதம் விதிக்கப்படும். அதுவே பொது இடங்களில் எரித்தால் 2000 ரூபாய் அபராதம் என்று கூறப்பட்டுள்ளது.மேலும் பிளாஸ்டிக் பொருட்களை குப்பைகளில் இருந்து பிரித்து வழங்க வேண்டும் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

அவ்வாறு பிரித்துக் கொடுக்க தவறும் பட்சத்தில் தனிநபர்களுக்கு 100 ரூபாயில் இருந்து 5 ஆயிரம் ரூபாய் வரையிலும் அபராதம் விதிக்கப்பட இருப்பதாக சென்னை மாநகராட்சி சார்பாக அறிக்கை வெளியிடப்பட்டுள்ளது.