சென்னை போரூர் அருகே இருக்கிறது சமயபுரம். இங்கு நூற்றுக்கணக்கான குடும்பத்தினர் வசித்து வருகின்றனர். இங்கிருக்கும் பெரும்பாலான வீடுகளில் பாதுகாப்பு கருதி கண்காணிப்பு கேமராக்கள் பொருத்தப்பட்டுள்ளன. இந்தநிலையில் 5 வது தெருவில் வீடுகளில் வைக்கப்பட்டிருந்த கண்காணிப்பு கேமராக்கள் திசை மாறியிருந்தன. இதனால் அதிர்ச்சியடைந்த அப்பகுதி மக்கள், கேமராவில் பதிவான காட்சிகளை ஆய்வு செய்து பார்த்தனர். 

அதில் மர்ம நபர் ஒருவர் உள்ளாடைகள் மட்டும் அணிந்து கையில் கத்தி போன்ற ஆயதங்களுடன் நள்ளிரவில் அப்பகுதியில் சுற்றி வந்திருக்கிறார். நீளமான ஒரு கம்பினை கொண்டு கண்காணிப்பு கேமராக்களை வேறு பக்கமாக திருப்பி லாவகமாக செயல்பட்ட காட்சியும் அதில் பதிவாகி இருந்தது. வீடுகளில் கொள்ளையடிக்க அந்த மர்ம நபர் நோட்டமிட்டுள்ளார். 

இதுகுறித்து அப்பகுதி மக்கள் சார்பாக காவல்துறையில் புகார் தெரிவிக்கப்பட்டும் எந்த நடவடிக்கையும் எடுக்கப்படவில்லை என்று கூறப்படுகிறது. இதனால் பொதுமக்கள் பீதியில் உள்ளனர். கொலை, கொள்ளை போன்ற சம்பவங்கள் நடப்பதற்கு முன்பாக அரை நிர்வாண கோலத்தில் சுற்றித்திரியும் கொள்ளையனை பிடிக்க காவலர்கள் விரைந்து நடவடிக்கை எடுக்க வேண்டும் என அப்பகுதி வாசிகள் கோரிக்கை விடுத்துள்ளனர்.