கொரோனா அறிகுறி இருந்தால் 3 நாட்களுக்குள் மருத்துவரை அணுக வேண்டும் என சுகாதாரத்துறை செயலாளர் ராதாகிருஷ்ணன் பொதுமக்களுக்கு அறிவுரை வழங்கியுள்ளார். 

சென்னை போரூரில் சுகாதாரத்துறை செயலாளர் ராதாகிருஷ்ணன் செய்தியாளர்களுக்கு பேட்டியளிக்கையில்;-  தமிழகத்தில் கொரோனா பாதிப்பை கண்டு மக்கள் அஞ்ச வேண்டாம். அரசு எடுக்கும் நடவடிக்கைகளுக்கு மக்கள் முழு ஒத்துழைப்பு தர வேண்டும். ஊரடங்கால் கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்டோர் எண்ணிக்கை குறைந்துள்ளது. பொது இடங்களில் மாஸ்க் அணிந்து, சமூக இடைவெளியை கடைபிடித்து பொதுமக்கள் ஒத்துழைப்பு தரவேண்டும் என்றார். 

சிறுபிள்ளைத்தனமாக நடக்கக்கூடாது. நாளை முதல் மக்கள் கூடுதல் கவனத்துடன் செயல்பட வேண்டும். கொரோனா அறிகுறி இருந்தால் 3 நாட்களுக்குள் மருத்துவரை அணுக வேண்டும் அறிவுறுத்தியுள்ளார். கொரோனா ஒழிப்பில் தமிழகம் முன்னோடி மாநிலமாக திகழ்கிறது.

மேலும், பேசிய அவர் தமிழகத்தில் 13 லட்சம் பேருக்கு கொரோனா பரிசோதனை செய்யப்பட்டுள்ளது. தமிழகத்தில் பிளாஸ்மா சிகிச்சை மூலம் பலர் குணமடைந்துள்ளனர். இதுவரை 8 லட்சம் பேர் மருத்துவ முகாம்களில் பங்கேற்றுள்ளனர். சென்னையில் உள்ள 39,590 தெருக்களில் தொற்று பாதித்த தெருக்களின் எண்ணிக்கை 9 ஆயிரத்தில் இருந்து 8 ஆயிரமாக குறைந்துள்ளது என தகவல் தெரிவித்துள்ளார்.