மலேசியா சென்ற சவுதி ஏா்லைன்ஸ் விமானத்தில் வந்த பயணி உயிரிழப்பு: அவசரமாக சென்னையில் தரையிறக்கம்!!
மதினாவிலிருந்து மலேசியா நாட்டின் கோலாலம்பூா் சென்று கொண்டிருந்த சவுதி ஏா்லைன்ஸ் விமானத்தில் பயணி ஒருவருக்கு திடீரென உடல் நலம் பாதிப்பு ஏற்பட்டது.
இதையடுத்து, மருத்துவ சிகிச்சைக்காக, சென்னையில் அவசரமாக விமானம் தரையிறக்கப்பட்டது. ஆனாலும் பயணி உயிரிழந்த்தால், அவருடைய உடல் குரோம்பேட்டை அரசு மருத்துவமனைக்கு அனுப்பப்பட்டது. விமானம் 3 மணி நேரம் தாமதமாக, மலேசியா புறப்பட்டு சென்றது.
சவுதி அரேபியாவில் உள்ள மதினா நகரில் இருந்து, சவுதி ஏர்லைன்ஸ் போயிங் ரக விமானம் 272 பயணிகளுடன், மலேசியா தலைநகர் கோலாலம்பூருக்கு இன்று காலை சென்று கொண்டு இருந்தது. விமானம் சென்னை வான்வெளியை கடந்து செல்லும் போது, விமானத்தில் பயணித்த மலேசியா நாட்டை சோ்ந்த அட்நம் பின் மாமத் (55) என்ற பயணிக்கு திடீரென நெஞ்சுவலி ஏற்பட்டது. உடனே அவருடைய மனைவி நபீஷம் பிந்த் கதறி அழுதாா்.
இதையடுத்து விமான பணிப்பெண்கள் விமானிக்கு தகவல் தெரிவித்தனா். இதை அடுத்து விமானி அவசரமாக, சென்னை விமான நிலைய கட்டுப்பாட்டு அறையை தொடர்பு கொண்டு தகவல் கொடுத்தார். மருத்துவ சிகிச்சைக்காக சென்னையில் அவசரமாக விமானம் தரையிறங்குவதற்கு அனுமதி கேட்டார்.
உடனே சென்னை விமான நிலைய கட்டுப்பாட்டு அறை அதிகாரிகள், டெல்லியில் உள்ள தலைமை கட்டுப்பாட்டு அறைக்கு தகவல் தெரிவித்தனர். அவர்கள் உடனடியாக அந்த விமானம் சென்னையில் தரையிறங்குவதற்கு அனுமதி அளித்து, மருத்துவ சிகிச்சைக்கு தேவையான உதவிகளையும் செய்யுமாறு கூறினா்.
இதையடுத்து, சவுதி அரேபியா ஏர்லைன்ஸ் விமானம் இன்று பகல் 12 மணியளவில், சென்னை சா்வதேச விமானநிலையத்தில் அவசரமாக தரையிறங்கியது. உடனடியாக சென்னை விமான நிலைய மருத்துவக் குழுவினர் விமானத்துக்குள் ஏறி, அந்தப் பயணியை பரிசோதித்தனர். ஆனால் அந்தப் பயணி ஏற்கனவே உயிரிழந்து இருந்தார். இதை அடுத்து மாரடைப்பால் மலேசியா நாட்டு பயணி உயிரிழந்ததாக அறிவித்தனா். அவருடைய மனைவி விமானத்திற்குள் கதறி அழுதது, உடன் இருந்த பயணிகளை மிகவும் கவலையடையச் செய்தது.
நத்தம் விஸ்வநாதனை வைத்தியலிங்கம் அடிக்க பாய்ந்தாரா..! நடந்தது என்ன..? ஜேசிடி பிரபாகர் விளக்கம்
இதையடுத்து குடியுரிமை அதிகாரிகள், உயிரிழந்த மலேசிய பயணியின் உடலை சென்னையில் இறக்குவதற்கு அனுமதி கொடுத்தனா். அதோடு உயிரிழந்தவரின் மனைவிக்கும் தற்காலிக அவசரகால விசா வழங்கப்பட்டது. இதையடுத்து உயிரிழந்தவரின் உடலை சென்னை விமானநிலைய போலீசாா் கைப்பற்றி, குரோம்பேட்டை அரசு மருத்துவமனை சவக்கிடங்கிற்கு அனுப்பி வைத்தனா். இதையடுத்து, அந்த விமானம் சுமாா் 3 மணி நேரம் தாமதமாக 270 பயணிகளுடன் மலேசிய தலைநகர் கோலாலம்பூர் புறப்பட்டுச் சென்றது.
உயிரிழந்தவரின் உடல் பிரேத பரிசோதனைக்குப் பின்னர், பதப்படுத்தப்பட்டு காா்கோ விமானத்தின் மூலம் மலேசியா எடுத்துச் செல்லப்படும் என்று விமானநிலைய அதிகாரிகள் தெரிவித்தனர்.