முதல்முறையாக பார்க்கிங் வசதியுடன் அடுக்குமாடி பேருந்து நிலையம் கட்ட சென்னை மாநகராட்சி நிர்வாகம் முடிவு செய்துள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.  

சென்னை மாநகராட்சியில் வாகனங்களை நிறுத்துவதற்கான வசதிகளை மேம்படுத்துவதற்கு பல்வேறு திட்டங்கள் செயல்படுத்தப்பட்டு வருகிறது. சென்னை தி.நகரில் இரண்டு பல்லடுக்கு வாகன நிறுத்தம் அமைக்கும் பணி நடைபெற்று வருகிறது. இதைபோல், ஸ்மார்ட் சிட்டி நிதி மூலம் சாலையோரங்களில் வாகனங்களை நிறுத்தும் வகையில் ஸ்மார்ட் பார்க்கிங் திட்டமும் செயல்படுத்தப்படுகிறது. 

இதற்கிடையில், சென்னை மாநகராட்சியில் பொதுமக்கள் - தனியார் பங்களிப்புடன் 2 ஆயிரம் கோடி செலவில் விரிவான ஒருங்கிணைந்த வாகன நிறுத்த மேலாண்மை திட்டம் செயல்படுத்தப்படும் என்று 2019-20ம் ஆண்டுக்கான நிதி நிலை அறிக்கையில் அறிவிக்கப்பட்டது. மேலும், 2 லட்சம் இருசக்கர வாகனங்கள், 2 லட்சம் நான்கு சக்கர வாகனங்கள் நிறுத்தக்கூடிய வகையில் நிலத்தடி வாகன நிறுத்தம், பல அடுக்கு வாகன நிறுத்தம் உள்ளிட்டவைகள் அமைக்கப்படும் என்றும் அதில் அறிவிக்கப்பட்டிருந்தது. 

இதை தொடர்ந்து இந்த திட்டத்திற்கான இடங்களை கண்டறிய வேண்டும் என்று சென்னை மாநகராட்சி ஆணையருக்கு உத்தரவிடப்பட்டிருந்தது. இதனையடுத்து, 100 இடங்களை ஆய்வு செய்து அதில் 60 இடங்களில் வாகன நிறுத்தங்கள் அமைக்கப்பட உள்ளன. 

அதன்படி பிராட்வே, சைதாப்பேட்டை, திருவான்மியூர் உள்ளிட்ட 24 இடங்களில் வணிக வளாகங்களுடன் இணைந்த பார்க்கிங் திட்டம் செயல்படுத்தபட உள்ளது. குறிப்பாக பிராட்வேயில் பார்க்கிங் வசதியுடன் கூடிய அடுக்குமாடி பேருந்து நிலையம் அமைக்கப்பட உள்ளது. தற்போது பேருந்து நிலையம் செயல்படும் இடத்தில் புதிதாக பேருந்து நிலையம் கட்டப்பட உள்ளது. இதில் தரை தளத்தில் பேருந்து நிலையமும், மேல் தளத்தில் பார்க்கிங் வசதியும் செய்யப்பட உள்ளது.