அமித்ஷாவை ஓ.பன்னீர்செல்வம் சந்தித்ததைத் தொடர்ந்து, எடப்பாடி பழனிசாமியுடன் பனிப்போர் தீவிரமடைந்துள்ளது. இதனால் அவரது அணி சார்பில் தங்கமணி ஓரிரு நாளில் டெல்லி சென்று பாஜக தலைவர்களை சந்தித்து முறையிட திட்டமிட்டுள்ளார். இதற்கிடையில் ரவீந்திரநாத்குமார் யாரிடமும் ஆலோசனை நடத்தாமல் தன்னிச்சையாக மக்களவையில் பேசி வருவதும் கட்சிக்குள் கடும் மோதலை ஏற்படுத்தியுள்ளது.

துணை முதல்வர் ஓ.பன்னீர்செல்வம், பாஜக தேசிய தலைவர் அமித்ஷாவை கடந்த திங்கள்கிழமை சந்தித்து பேசினார். அப்போது, சேலம் எடப்பாடி தொகுதியிலேயே அதிமுக வேட்பாளர் தோல்வியடைந்தார். அதனால் கட்சிக்கு என்னை நீங்கள் பொதுச் செயலாளராக்க வேண்டும். அல்லது முதல்வராக்க வேண்டும் என்று கோரிக்கை வைத்துள்ளார். அதற்கு அமித்ஷா, ஓபிஎஸ்சுக்கு ஆறுதல் கூறி அனுப்பினார்.

ஓ.பன்னீர்செல்வம் சந்திப்பு குறித்து தங்கமணி, வேலுமணியுடன் எடப்பாடி பழனிச்சாமி அவசர ஆலோசனை நடத்தினார். அதில் ஓ.பன்னீர்செல்வத்தை கட்சி மற்றும் ஆட்சியில் இருந்து முற்றிலும் ஓரங்கட்டுவது என முடிவு எடுத்துள்ளனர்.

அதன்படி அவர் டெல்லியில் இருந்து திரும்பிய பிறகு அவருடன் முதல்வர் பேசுவதை நிறுத்தி விட்டார். இருவரும் சமீபத்தில் பேட்டரி கார் தொடக்க விழாவில் அருகருகே பேசாமல்தான் நின்று கொண்டிருந்தனர். அதன்பின்னரும் ஆலோசனை நடத்தவில்லை.

மேலும், தங்கமணியை ஓரிரு நாளில் டெல்லிக்கு அனுப்பி, அமித்ஷாவை சந்தித்துப் பேச முடிவு எடுக்கப்பட்டுள்ளது. அப்போது பன்னீர்செல்வத்தைவிட எங்கள் அணி, பாஜகவை முழுமையாக ஆதரிக்கும். நீங்கள் நினைப்பதை விட சிறப்பாக நாங்கள் செய்வோம் என்று உறுதியளிக்கவும் திட்டமிட்டுள்ளனர்.

இதற்கிடையில் மக்களவையில் தினமும் பன்னீர்செல்வத்தின் மகன் ரவீந்திரநாத்குமார் பேசி வருகிறார். அப்போது, ஜெயலலிதா இருந்தபோது அதிமுக எதிர்த்து வந்த பல்வேறு கொள்கை முடிவுகளை, ரவீந்திரநாத்குமார் ஆதரித்து பேசுகிறார். குறிப்பாக மோட்டார் வாகனச் சட்டம், முத்தலாக் சட்டம் ஆகியவற்றில் அதிமுகவின் கொள்கைக்கு எதிராக பேசி வருகிறார்.

அவர் என்ன பேச வேண்டும், அதிமுகவின் கொள்கை என்ன என்பது குறித்து முதல்வர் எடப்பாடி பழனிசாமியிடம் அவர் பேசுவதில்லையாம். தன்னிச்சையாக முடிவு எடுத்து பேசி வருகிறாராம். அவரது பேச்சை தயாரிக்க 4 பேர் கொண்ட குழுவை நியமித்துள்ளாராம்.

இந்தக் குழுவில் உள்ள 4 பேரும் தனது சமூகத்தைச் சேர்ந்தவர்களாக பார்த்து நியமித்துள்ளாராம். அவர்கள் எழுதிக் கொடுப்பதை அப்படியே படிக்கிறாராம். அவர் அந்த அறிக்கையில் உள்ள தகவல்களின் உள்ளர்த்தம் தெரிந்து படிக்கிறாரா, தெரியாமல் படிக்கிறாரா என்று அதிமுக மூத்த தலைவர்களே குழம்பி போய் உள்ளார்களாம். இது குறித்து முதல்வர் எடப்பாடி பழனிசாமி, தனது ஆதரவளர்களுடன் ஆலோசனை நடத்தியுள்ளார். அவருக்கு எப்படி கடிவாளம் போடலாம் என்று தீவிரமாக ஆலோசித்துள்ளனர்.

மேலும், டெல்லியில் உள்ள பழைய தமிழ்நாடு இல்லத்தில் திமுக எம்பிக்கள் மற்றும் அதிமுக மாநிலங்களவை எம்பிக்கள் தங்கியுள்ளனர். புது தமிழ்நாடு இல்லத்தில் ரவீந்திரநாத்குமார் மட்டுமே தங்கியுள்ளார்.

மேலும் பாராளுமன்ற வளாகத்தில் ஒவ்வொரு கட்சிக்கும் அலுவலகம் ஒதுக்கப்பட்டுள்ளது. அதிமுகவுக்கும் அலுவலகம் ஒதுக்கப்பட்டுள்ளது. ஆனால் அங்கு இதுவரை ரவீந்திரநாத்குமார் சென்றது இல்லையாம். மாநிலங்களவை எம்பிக்களுடனும் பேசுவதில்லையாம். ஒன்றாக சேருவதில்லையாம்.

பாஜக எம்பிக்களுடன்தான் சேர்ந்து சுற்றுகிறாராம். மக்களவையிலும் பாஜக என்ன நினைக்கிறதோ, எந்த திட்டம் கொண்டு வருகிறதோ அதை ஆதரித்து பேசுகிறாராம். அவர் முழுமையான பாஜ எம்பியாகவே மாறிவிட்டாராம். ஏன் பாஜவுக்கு ஓ.பன்னீர்செல்வம் வரவில்லை என்றால் கூட, ரவீந்திரநாத்குமார் மட்டுமாவது சென்று விடுவார் என்கிற அளவுக்கு அவரது நடவடிக்கைகள் முழுமையாக மாறிவிட்டதாம்.

இதுகுறித்து எடப்பாடிக்கு புகார்கள் சென்றதால், அவர் மீது நடவடிக்கை எடுக்கலாமா என்பது குறித்தும் தீவிர ஆலோசனை நடத்தப்பட்டு வருகிறதாம். மொத்தத்தில் எடப்பாடி பழனிசாமிக்கும், ஓ.பன்னீர்செல்வத்துக்கும் இடையே உச்சக்கட்ட பனிப்போர் நிலவுவதால் கட்சியில் விரைவில் அதிரடி நிகழ்ச்சிகள் அரங்கேறலாம் என்கின்றனர் அதிமுக மூத்த தலைவர்கள்.