அதிமுகவில் கட்சியையும், ஆட்சியையும் தன்னுடைய முழு கட்டுப்பாட்டில் கொண்டு வர டிடிவி தினகரன் முயன்றதால், முதல்வராக இருந்த எடப்பாடி பழனிசாமி, அவரை கட்சியில் ஓரங்கட்ட ஆரம்பித்தார். இதனால் 11 எம்எல்ஏக்கள் ஆதரவுடன் தனித்து செயல்பட்டு வந்த ஓ.பன்னீர்செல்வத்தை மீண்டும் கட்சியில் சேர்த்தனர்.

அவருக்கு கட்சியின் ஒருங்கிணைப்பாளர் பதவி வழங்கப்பட்டது.ஆட்சியில் துணை முதல்வர் பதவியும் வழங்கப்பட்டது. ஆரம்பத்தில் இருவரும் சசிகலாவுக்கு எதிராக ஒருங்கிணைந்து செயல்பட்டனர். இதனால் சசிகலா என்ற மாயை முற்றிலும் ஒழிக்கப்பட்டது. தினகரனையும் முற்றிலும் அரசியலில் இருந்து ஓரங்கட்டி விட்டனர். தற்போது தினகரன் அரசியல் கட்சிகளில் கடைசி இடத்தில் உள்ளார்.

அதேநேரத்தில் ஓ.பன்னீர்செல்வத்துக்கு மத்திய பாஜக தலைவர்களுடன் மிகவும் நெருக்கம் இருந்தது. மோடி, அமித்ஷா ஆகியோருடன் எப்போது வேண்டுமானாலும் போனில் பேசும் நிலையில் இருந்தார். இதனால் எடப்பாடி பழனிசாமி, தங்கமணி, வேலுமணி ஆகியோர் மேற்கு மாவட்டத்தை சேர்ந்த திரிவேணி குரூப்ஸ் உரிமையாளர்கள் துணையுடன் அதானியுடன் நெருக்கத்தை ஏற்படுத்திக் கொண்டனர்.

பின்னர் அதானி மூலமாக அமித்ஷா, தமிழக பாஜக பொறுப்பாளர் பியூஸ் கோயல் ஆகியோருடன் நெருக்கமான உறவை ஏற்படுத்திக் கொண்டனர். அடிக்கடி பிரதமர் மோடியையும் சந்திக்கத் தொடங்கினர். இவர்களின் உறவு பலப்பட்டதால், தமிழகத்தில் ஓ.பன்னீர்செல்வத்தை முற்றிலுமாக ஓரங்கட்ட ஆரம்பித்து விட்டனர்.

துணை முதல்வரின் துறையையும், எடப்பாடி பழனிசாமி அடிக்கடி ஆய்வு செய்யத் தொடங்கினார். அதோடு அவரது துறை அறிவிப்புகளையும் 110 விதியின் கீழ், எடப்பாடி பழனிச்சாமி வாசித்தார். ஆட்சியில் பன்னீர்செல்வத்துக்கு எந்த முக்கியத்துவமும் இல்லாமல் பார்த்துக் கொண்டார்.

மேலும், கட்சியில் பன்னீர்செல்வம் ஒருங்கிணைப்பாளராக இருந்தாலும், முடிவுகள் அனைத்தையும் எடப்பாடிதான் எடுத்து வந்தார். மாநிலங்களவைக்கு 2 பேரை தேர்வு செய்யும்போது பன்னீர்செல்வத்திடம் எந்த கருத்தையும் கேட்கவில்லை. 2 பேரையும் எடப்பாடியே முடிவு செய்தார். கடைசியில் அவரிடம் ஒப்புதல் மட்டுமே வாங்கினார். நிர்வாகிகள் நியமனத்திலும் அவ்வாறே நடந்து கொண்டார்.

இது பன்னீர்செல்வத்தை கோபமடைய வைத்தது. இதனால் சட்டப்பேரவை கூட்டத் தொடர் முடிந்ததும், எடப்பாடியுடன் எந்த ஆலோசனையும் செய்யாமல், பாஜக தேசிய தலைவர் அமித்ஷாவை கடந்த திங்கள்கிழமை சந்தித்து பேசினார்.

அப்போது கட்சியில் தன்னை ஓரங்கட்டுவது குறித்து புகார் தெரிவித்துள்ளார். நீங்கள் சொன்னதால்தான் அதிமுகவில் இணைந்தேன். கட்சியில் எனக்குத்தான் செல்வாக்கு அதிகம். மக்களிடம் எனக்கு ஆதரவு அதிகம். அதை என் மகனை வெற்றி பெற வைத்ததன் மூலம் நிரூபித்து காட்டியுள்ளேன்.

சேலம் எடப்பாடி தொகுதியிலேயே அதிமுக வேட்பாளர் தோல்வியடைந்தார். அதனால் கட்சிக்கு என்னை நீங்கள் பொதுச் செயலாளராக்க வேண்டும். அல்லது முதல்வராக்க வேண்டும் என்று கோரிக்கை வைத்துள்ளார். அவரது குமுறல்களை அமைதியாக கேட்டுக் கொண்ட அமித்ஷா, வேலூர் தேர்தல் முடிந்த பிறகு சில அதிரடி முடிவுகளை எடுத்தாக வேண்டும். அதுவரை கொஞ்சம் பொறுமையாக இருங்கள் என்று கூறியுள்ளார். இதனால் தெம்பாக டெல்லியில் இருந்து சென்னை திரும்பியுள்ளார் ஓ.பன்னீர்செல்வம்.