தமிழகத்தில் கொரோனா குறைந்து வரும் நிலையில் பொதுமக்கள் அலட்சியமாக இல்லாமல், முகக்கவசம் அணிவது, சமூக விலகலை பின்பற்ற வேண்டும் என  சுகாதாரத்துறை செயலாளர் ராதாகிருஷ்ணன் கூறியுள்ளார்.

திருச்சி அரசு தலைமை மருத்துவமனையில் சுகாதாரத் துறை செயலாளர் ராதாகிருஷ்ணன் ஆய்வு மேற்கொண்டார். இதையடுத்து செய்தியாளர்களுக்கு பேட்டியளித்த அவர்;- திருச்சியில் முன்பு அதிகரித்து வந்த கொரோனா பாதிப்பு தற்போது குறைய தொடங்கியுள்ளது. காய்ச்சல் முகாம் நடத்தி கொரோனா பாதிக்கப்பட்டவர்களை கண்டறிந்து வருகிறோம். திருச்சியில் கொரோனா சிறப்பு மருத்துவமனைகளில் 1302 படுக்கைகள் உள்ளன. தமிழகத்தில் கொரோனாவுக்கு சிகிச்சை பெறுபவர்கள் எண்ணிக்கை 50,000 என்ற அளவில் உள்ளது. தமிழகத்தில் கொரோனா பாதிப்பு படிப்படியாக குறைந்து வருவதற்கான அறிகுறிகள் தென்படுகின்றன. தற்போது தான் பொதுமக்கள் கவனமாகவும், அக்கறையுடனும் இருக்க வேண்டும்.

ஏனெனில் பல்வேறு நடவடிக்கைகளின் காரணமாகவே கொரோனா படிப்படியாக குறைய துவங்கியுள்ளது. இந்த நேரத்தில் பொதுமக்கள் அலட்சியமாக இல்லாமல், முகக்கவசம் அணிவது, சமூக விலகலை பின்பற்றுதல், கை கழுவுவது, முதியவர்கள் மற்றும் நோய்வாய் பட்டவர்களை தனிமையில் வைப்பது போன்ற நடவடிக்கைகளை தவறாது பின்பற்ற வேண்டும் என்றார். 

கொரோனாவின் அடுத்த அலையை தடுக்க பொதுமக்கள் முழு ஒத்துழைப்பு வழங்க வேண்டும். அப்படி வழங்கும் போது நோயை கட்டுப்படுத்தலாம். சித்த மருத்துவம் முக்கியத்துவம் பெற்று வருகிறது. அனைத்து மாவட்ட அரசு மருத்துவமனைகளிலும் சித்த மருத்துவ பிரிவு செயல்பட்டு வருகிறது. கொரோனா தொற்றினால் தமிழகத்தில் தான் அதிக அளவிலான மருத்துவர்கள் உயிரிழக்கிறார்கள் என்கிற ஐ.எம்.ஏ. வின் அறிக்கை அரசின் அறிக்கை இல்லை. ஐ.சி.எம்.ஆர் அளிக்கும் அறிக்கை தான் அதிகாரப்பூர்வ அறிக்கை என்றும் சுகாதாரத்துறை செயலாளர் ராதாகிருஷ்ணன் விளக்கம் அளித்துள்ளார்.