நாடு முழுவதும் வெங்காய விலை தாறுமாறாக உயர்ந்து வருகிறது. இதனால் ஏழைகள், நடுத்தர வர்க்கத்தினர் என பல்வேறு தரப்பினரும் அதிர்ச்சியில் உள்ளனர். வெங்காய விலை உயர்வால் உணவகங்களில் வெங்காயத்தை உபயோகப்படுத்துவதை உரிமையாளர்கள் தவிர்த்து வருகின்றனர். வெங்காய விலையை கட்டுப்படுத்த அரசு முயற்சி எடுக்க வேண்டும் என பலரும் கோரிக்கை விடுத்து வருகின்றனர்.

இந்தநிலையில் பண்ணைப்பசுமை நுகர்வோர் கூட்டுறவு சார்பாக இன்று காலையில் வெங்காயம் ஒரு வாகனத்தில் தலைமை செயலகத்திற்கு வந்தது. அதில் கிலோ கணக்கில் வெங்காயங்கள் விற்பனை செய்யப்பட்டது. வெங்காயம் விற்கப்படுவதை அறிந்து அலுவகத்தில் பணியில் இருந்த அரசு ஊழியர்கள் வெளியே வந்து வெங்காயத்தை வாங்குவதற்காக முட்டி மோதினர்.

இரண்டரை கிலோ வெங்காயம் 100 ரூபாய்க்கு விற்கப்பட்டது. ஊழியர்கள் அனைவரும் திரண்டு வந்து வெங்காயம் வாங்குவதில் மும்முரமாக செயல்பட்டனர். தலைமை செயலகத்தில் பணிகளுக்காக வந்திருந்த பொதுமக்களும் வெங்காயத்தை வாங்க தொடங்கினர். நாடு முழுவதும் வெங்காய விலை தாறுமாறாக உயர்ந்து பொதுமக்கள் அவதிப்பட்டு வரும் நிலையில் தலைமை செயலகத்தில் அரசு ஊழியர்களுக்கு வெங்காயம் விற்க்கப்பட்ட சம்பவம் சலசலப்பை ஏற்படுத்தி இருக்கிறது.