சென்னையில் காதலிக்க மறுத்த 8-ம் வகுப்பு மாணவியின் கழுத்தை அறுத்த இளைஞர் நித்யானந்தனை போலீசார் அதிரடியாக கைது செய்துள்ளனர்.

சென்னை அமைந்தகரை முத்துமாரியம்மன் காலனியில் வசித்து வருபவர் நித்தியானந்தன் (20). இவர் வசிக்கும் வீட்டின் மாடியில் 8-ம் வகுப்பு மாணவி அவரது குடும்பத்துடன் வசித்து வருகிறார். இந்நிலையில், நேற்று முன்தினம் மாலை வீட்டின் மொட்டை மாடியில் இருந்து சிறுமியின் அலறல் சத்தம் கேட்டுள்ளது. உடனே அக்கம்பக்கத்தினர் அங்கு சென்று பார்த்துள்ளனர். 

அப்போது நித்தியானந்தன் அந்த பள்ளி சிறுமியின் கழுத்தில் கத்தியால் அறுக்க முயற்சியில் ஈடுபட்டுள்ளார். மாணவியின் பெற்றோர் வருவதைப் பார்த்த நித்தியானந்தன் அங்கிருந்து தப்பி ஓடியுள்ளார். படுகாயமடைந்து ரத்த வெள்ளத்தில் கிடந்த மாணவியை மீட்டு கீழ்ப்பாக்கம் அரசு மருத்துவமனையில் அனுமதித்தனர். இது தொடர்பாக காவல் நிலையத்தில் புகார் அளித்தனர். வழக்குப்பதிவு செய்த போலீசார் நித்யானந்தனை தேடி வந்தனர்.

போலீசாரின் முதற்கட்ட விசாரணையில் ஒரு தலைக்காதல் விவகாரத்தில் சிறுமியின் கழுத்தை நித்யா அறுத்தது தெரியவந்தது. இதனையடுத்து, கோயம்பேட்டில் பதுங்கியிருந்த இளைஞரை போலீசார் கைது செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.