திருப்போரூர் அருகே மர்ம பொருள் வெடித்து கூலித்தொழிலாளி பரிதாபமாக உயிரிழப்பு
செங்கல்பட்டு மாவட்டம் திருப்போரூர் அருகே பழைய கட்டிடம் ஒன்றில் செடி, கொடிகளை அகற்றும் பொழுது மர்ம பொருள் வெடித்துச் சிதறியதில் கூலித்தொழிலாளி உயிரிழந்த சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.
செங்கல்பட்டு மாவட்டம் திருப்போரூர் அடுத்துள்ள தண்டலம் கிராமத்தில் ஏரிக்கரை அருகே சிவகுருநாதன் இண்டஸ்ட்ரீஸ், செயல்பட்டு வந்தது. இந்த நிலையில் கடந்த பல மாதங்களாக இந்த நிறுவனம் செயல்படாமல் உள்ளது. மீண்டும் இந்த நிறுவனத்தில் பணிகளை துவங்க நிறுவனம் சார்பில் முயற்சி மேற்கொள்ளப்பட்டு வருவதாக கூறப்படுகிறது. இதனை அடுத்து பல ஆண்டுகளாக கைவிடப்பட்டிருந்த நிறுவனம் என்பதால் துப்புரவு பணிகள் மேற்கொள்ளப்பட்டு வருகிறது.
நிறுவனத்தை சுற்றி வளர்ந்த முள் செடிகள் மற்றும் புதர்கள், சிறு சிறு மரக்கன்றுகளை அகற்றுவதற்காக பணியாளர்கள் கடந்த சில தினங்களாக பணியாற்றி வருகின்றனர். அந்த வகையில் மாமல்லபுரம் பூஞ்சேரி அடுத்துள்ள மாசிமா நகர் பகுதியைச் சேர்ந்த ரமேஷ் என்பவரின் மகன் சீனு (வயது 20). இன்று காலை முதல், நிறுவனத்திற்கு வெளியே வளர்ந்திருந்த, முட் புதர்கள் மற்றும் அங்கிருந்த சிறு சிறு செடி, கொடிகளை அகற்றும் பணியில் ஈடுபட்டு வந்தார்.
அப்பொழுது அங்கிருந்த ஒரு சிறு மரக்கிளையை வெட்டிய பொழுது, கையில் இருந்த கத்தி தவறி முற்புதாரில் இருந்த ஒரு பார்சலில் விழுந்து உள்ளது. கத்தி விழுந்த உடனே அந்த பார்சல் பயங்கர சத்தத்துடன் வெடித்துள்ளது. அங்கு பணி செய்து வந்த சிலர் மீதும் துகள்கள் வந்து விழுந்து உள்ளது. இந்த வெடி விபத்தால் படுகாயம் அடைந்த சீனு ரத்த வெள்ளத்தில் அங்கு மயங்கி விழுந்துள்ளார்.
அக்கம்பக்கத்தினர் மீட்டு 108 ஆம்புலன்ஸ் மூலம் செங்கல்பட்டு அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் சிகிச்சைக்காக சேர்த்தனர். இதனை அடுத்து தகவல் அறிந்து சம்பவ இடத்திற்கு விரைந்த திருப்போரூர் காவல் துறையினர் இது குறித்து வழக்கு பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.
சம்பவம் நடைபெற்ற இடத்தில் பரிசோதனை செய்த பொழுது, நாட்டு வெடிகுண்டு போன்ற அமைப்புடைய இரண்டு மர்ம பொருட்களை கண்டுபிடித்துள்ளனர். கைப்பற்றப்பட்ட பொருட்கள் குறித்து விசாரணை மேற்கொள்ளப்பட்டு வருவதாக காவல்துறையினர் தெரிவித்துள்ளனர். கைப்பற்றப்பட்ட இரண்டு பொருட்களும் நாட்டு வெடிகுண்டாக இருப்பதற்கு வாய்ப்புகள் அதிகம் என காவல்துறை வட்டாரங்கள் தெரிவிக்கின்றன. ஆள் நடமாட்டம் இல்லாத இந்த பகுதியில் யார் கொண்டு வந்து வைத்தது, சதி வேலை செய்ய திட்டமிட்டு இருக்கிறார்களா? என்ற கோணத்திலும் காவல்துறையினர் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.