தலையில் கல்லை போட்டு மூதாட்டி கொலை செய்யப்பட்டார். சொத்துக்காக அவரை கொன்றார்களா என போலீசார் விசாரிக்கின்றனர்.

 திருப்போரூர் அடுத்த வெண்பேடு கிராமம், மேட்டு தெருவை சேர்ந்தவர் கெங்கம்மாள் (70). இவரது கணவர் வேணுகோபால், கடந்த சில ஆண்டுகளுக்கு முன் இறந்து விட்டார். இவர்களுக்கு டில்லி, சங்கர் என்ற மகன்களும், கன்னியம்மாள், ராணி என்ற மகள்களும் உள்ளனர்.

இதில், மூத்த மகன் டில்லி, மகள் கன்னியம்மாள் ஆகியோர் இறந்து விட்டனர். இதையடுத்து டில்லியின் மனைவி பார்வதி, பேரன் கார்த்திக் ஆகியோருடன் கெங்கம்மாள் ஒரே வீட்டில் வசித்து வந்தார். இளைய மகன் சங்கர், தாயுடன் ஏற்பட்ட கருத்து வேறுபாடு காரணமாக அதே ஊரில் தனியாக வசிக்கிறார். மற்றொரு மகள் ராணி களிவந்தப்பட்டு கிராமத்தில் வசிக்கிறார்.

இந்நிலையில் நேற்று முன்தினம் மாலை சுமார் 5 மணியளவில் கெங்கம்மாள், மேய்ச்சலுக்கு சென்ற மாடுகளை பிடித்து வருவதாக கூறி சென்றார். ஆனால், நீண்ட நேரமாகியும் அவர் வீடு திரும்பவில்லை. இதனால் மருமகள் பார்வதி, பேரன் கார்த்திக் ஆகியோர் அவரை பல இடங்களில் தேடினர். இதற்கிடையில் உறவினர்களும் கெங்கம்மாளை தேடினர்.

அப்போது அதே பகுதியில், கால பைரவர் மலை கோயிலுக்கு செல்லும் வழியில் கெங்கம்மாள், தலையில் பலத்த காயத்துடன் ரத்த வெள்ளத்தில் சடலமாக கிடந்தார். அருகில் பெரிய கல் ரத்த கறையுடன் இருந்தது.

தகவலறிந்து காயார் போலீசார் சம்பவ இடத்துக்கு சென்று சடலத்தை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக செங்கல்பட்டு மருத்துவமனைக்கு அனுப்பினர். மேலும் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரித்தனர். அதில் மூதாட்டி கெங்கம்மாள் தலையில் கல்லை போட்டு கொலை செய்தது தெரிந்தது.

தொடர்ந்து போலீசார், கெங்கம்மாளை கொன்றது யார், சொத்து பிரச்னையில் அவர் கொலை செய்யப்பட்டாரா அல்லது வேறு காரணமா என பல்வேறு கோணங்களில் அவரது குடும்ப உறுப்பினர்களிடம் தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர். இச்சம்பவம் அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.