சென்னையில் ஆடையின்றி இளம்பெண் ஒருவர் சாலையில் தள்ளாடியபடி நடந்து சென்ற சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது. 

சென்னை ராயபேட்டை பீட்டர்ஸ் ரோட்டில் உள்ள புதுகல்லூரி பேருந்து நிறுத்தம் அருகே நேற்று இளம்பெண் ஒருவர் ஆடை இல்லாமல், மயக்க நிலையில் தடுமாறிய நிலையில் நடந்து சென்றுள்ளார். இதை பார்த்து அதிர்ச்சியடைந்த பொதுமக்கள் இது தொடர்பாக காவல்துறைக்கு தகவல் தெரிவித்தனர். இதனையடுத்து, பாதுகாப்பு பணியில் இருந்த ராயப்பேட்டை உதவி ஆய்வாளர் ஜெயராமன் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்று ஆடையின்றி நடந்து வந்த இளம் பெண்ணுக்கு ஆடை போர்த்திவிட்டார். 

பின்னர், அருகில் இருந்த பெண்களின் உதவியுடன் துப்பட்டாவை போர்த்தி, ராயபேட்டை அரசு மருத்துவமனைக்கு அழைத்து சென்றார். இதுதொடர்பாக அந்த பெண்ணிடம் விசாரணை நடத்தியபோது தெலுங்கு மொழி மட்டும் பேசியுள்ளார். சற்று மனநலம் பாதிக்கப்பட்டவர் போல் மாறி மாறி பேசியுள்ளார். விசாரணையின் போது இளம்பெண் தனக்கு வயிறு வலிப்பதாக கூறி கதறி அழுதுள்ளார். இதைதொடர்ந்து அந்த இளம்பெண் ராயப்பேட்டை அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வருகிறார். 

அந்த பெண் அலங்கோலமாக வந்ததன் காரணம் என்ன? போதை பொருட்கள் ஏதாவது கொடுத்து அந்த பெண்ணை யாரேனும் கடத்தி வந்து பலாத்காரம் செய்யப்பட்டாரா? என பல்வேறு கோணத்தில் போலீசார் விசாரணையை தொடங்கியுள்ளனர். மேலும், புதுக்கல்லூரி அருகே உள்ள சிசிடிவி கேமராவை ஆய்வு செய்து வருகின்றனர். மீட்கப்பட்ட இளம் பெண்ணுக்கு மருத்துவ பரிசோதனை செய்ய பிறகே உண்மை தெரியவரும் என போலீசார் தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.