ஒருங்கிணைந்த சென்னை மாகாணத்தில் இருந்து கர்நாடகா, கேரளா, ஆந்திரா ஆகிய மாநிலங்கள் மொழிவாரி அடிப்படையில் 1956 ம் ஆண்டு நவம்பர் 1 ம் தேதி பிரிக்கப்பட்டன. இதற்காக தியாகி சங்கரலிங்கனார் 75 நாட்கள் உண்ணாவிரதம் இருந்து உயிர் நீத்திருந்தார். அந்த நாளை நினைவு கூறும் வகையில் ஒவ்வொரு வருடமும் அந்தந்த மாநிலங்களில் சிறப்பாக கொண்டாடி வருகின்றனர். அதே போன்று தமிழ்நாட்டிலும் கொண்டாடப்பட வேண்டும் என்கிற கோரிக்கை நீண்ட நாட்களாக தமிழ் உணர்வாளர்களால் அரசிடம் வைக்கப்பட்டிருந்தது.

இதை ஏற்று தமிழக முதல்வர் எடப்பாடி பழனிசாமி நவம்பர் 1 ம் தேதி தமிழ்நாடு நாளாக கடைபிடிக்கபடும் என்றும் உத்தரவிட்டார். கடந்த சட்டமன்ற கூட்டத்தொடரில் 110 விதியின் கீழ், ஒவ்வொரு வருடமும் நவம்பர் 1 ம் தேதி இனி தமிழ்நாடு நாளாக கொண்டாடப்படும் என்று அறிவித்திருந்தார். இதற்கான அரசாணையை தமிழக அரசு தற்போது வெளியிட்டிருக்கிறது. இதற்கு 10 லட்சம் நிதியும் ஒதுக்கீடு செய்து உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது. தமிழ்நாடு தினம் முதன் முறையாக கொண்டப்படுவதையடுத்து அதற்கான ஏற்பாடுகளை அரசு சிறப்பாக செய்து வருவதாக அதிகாரிகள் தெரிவிக்கின்றனர்.

இவற்றுடன் தமிழ் பல்கலைக்கழகத்தில் கால்டுவெல் இருக்கை அமைக்கப்படும் என்றும் திருச்சியில் தியாகராஜ பாகவதருக்கு மணி மண்டபம் கட்டப்படும் என்றும் முதல்வர் சட்டமன்ற கூட்டத்தொடரில் அறிவித்திருந்தது குறிப்பிடத்தக்கது.