கடந்த சில நாட்களாக தமிழகம் முழுவதும் பரவலாக மழை பெய்து வந்தது. கடலோர உள்மாவட்டங்கள் மற்றும் தென்மாவட்ட பகுதிகளில் கனமழை பெய்தது. இதனால் மாநிலம் முழுவதும் இருக்கும் முக்கிய அணைகள் வேகமாக நிரப்பி வந்தன. மேட்டூர் அணை இந்த வருடம் இரண்டு முறை தனது முழு கொள்ளளவை எட்டியது. இதனிடையே வடகிழக்கு பருவமழை இன்னும் சில தினங்களில் தொடங்க இருக்கிறது.

இதுதொடர்பாக வானிலை ஆய்வு மைய இயக்குனர் பாலசந்திரன் கூறும்போது, தென் இந்திய பகுதிகளில் வளிமண்டலத்தின் கீழடுக்கில் கிழக்கு திசை காற்று வீச துவங்கியுள்ளதால் தென்மேற்கு பருவமழை, வட மற்றும் மத்திய இந்தியாவில் படிப்படியாக விலகி வருகிறது. இதனால், வடகிழக்கு பருவமழை அக்., 17 ஒட்டிதுவங்க வாய்ப்பு இருப்பதாக தெரிவித்தார். 

அடுத்த 24 மணி நேரத்தில், தமிழகம் மற்றும் புதுச்சேரியில் ஒரு சில இடங்களில் லேசான மழை பெய்ய வாய்ப்பிருப்பதாகவும் வட தமிழகத்தின் ஓரிரு இடங்களில் கனமழை பெய்யக்கூடும் என்றும் தெரிவித்தார். சென்னை புறநகர் பகுதிகளில், லேசான மழை பெய்யக்கூடும் என்றார்.

மேலும் வடகிழக்கு பருவமழை, இந்த ஆண்டு வழக்கத்தை விட 2 நாட்களுக்கு முன்னதாகவே துவங்க வாய்ப்பு இருப்பதாக கூறிய அவர்  இயல்பான அளவில் வடகிழக்கு பருவமழை பெய்யும் என்றார். 

கடந்த 24 மணி நேரத்தில் தமிழகம் மற்றும் புதுச்சேரியில் ஒரு சில இடங்களில் வெப்பசலனம் காரணமாக மழை பெய்துள்ளது. அதிகபட்சமாக கோபிசெட்டிபாளையத்தில் 13 செ.மீ., மழை பதிவாகியுள்ளது.