இந்த ஆண்டு தென்மேற்கு பருவமழைக் காலம் முடிந்த பின்னரும் வெப்பச் சலனம் காரணமாக தமிழகம், புதுச்சேரியில் தொடர்ந்து மழை  பெய்த வண்ணம் இருந்தது. தற்போது மாநிலத்துக்கு அதிக மழைப் பொழிவைக் கொண்டு வரும் வடகிழக்கு பருவமழைக் காலம் ஆரம்பித்துள்ளது. இது குறித்து பிரபல வானிலை கணிப்பாளரான  தமிழ்நாடு வெதர்மேன் பிரதீப் ஜான் விரிவாக தெரிவித்துள்ளார்.

 

இதுகுறித்து அவர் தனது முகநூல் பக்கத்தில், “வடகிழக்கு பருவமழையே வருக. இனி குடைகளை தினமும் எடுத்துச் செல்ல வேண்டி இருக்கும். சுளீர் வெயிலும், திடீர் மழையும் வரும் நாட்களில் அதிகமாக இருக்கும். தமிழகத்துக்கு இந்த முறை வடகிழக்கு பருவமழை மூலம் நல்ல மழைப் பொழிவு இருக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. அக்டோபர் மாதம், வழக்கத்தைவிட அதிகமாகவும், நவம்பரில் சுமாராகவும், டிசம்பரில் சாதரணமாகவும் மழைப் பொழிவை எதிர்பார்க்கலாம்.`

சென்னை மற்றும் மாநிலத்தில் உள்ள பிற கடலோர மாவட்டங்களைப் பொறுத்தவரை, பகல் நேரத்தில் திடீர் மழைப் பொழிவு இருக்கும். இரவு நேரத்தில் மழையின் தாக்கம் அதிகமாக இருக்கும். அது விடியும்போதும் மழைப் பொழிவைக் கொண்டு வரும்.  தமிழகத்தின் உள் மற்றும் மேற்கு மாவட்டங்களான கோவை, நீலகிரி, விருதுநகர், தேனி, திண்டுக்கல், மதுரை, திருச்சி, ஈரோடு, நாமக்கல், சேலம், திருப்பூர் மற்றும் தென் மாவட்டங்களான திருநெல்வேலி, கன்னியாகுமரி, தூத்துக்குடி, ராமநாதபுரம், புதுக்கோட்டை, சிவகங்கை உள்ளிட்ட அனைத்திலும் நல்ல மழை பெய்யும். குன்னூர், கொடைக்கானல் மற்றும் ஊட்டியில் இனி தினமும் மழை பெய்யலாம்.

கேரளாவிலும் இந்த முறை அதிக மழை பெய்யும். ஆனால், அது வெள்ளப் பெருக்கை உண்டு செய்யாது. ஏனென்றால் வடகிழக்கு பருவமழையானது, மலைப் பிரதேசத்திலும் நிலப் பிரதேசத்திலும் ஒரே நேரத்தில் மழை பொழிவைக் கொண்டு வராது.  பெங்களூருவில் அக்டோபர் மாதம் நல்ல மழை பெய்யும். அதன் பிறகு அங்கு அவ்வளவு மழை இருக்காது” எனப்பதிவிட்டுள்ளார்.