கர்நாடக மாநிலத்தின் வட பகுதிகள் வெள்ளத்தில் மிதப்பதால் மக்களின் இயல்பு வாழ்க்கை முற்றிலும் பாதித்துள்ளது. 

மகாராஷ்டிராவில் கடந்த சில வாரமாக கன மழை பெய்து வருகிறது. இதனால் கிருஷ்ணா, கொய்னா உள்ளிட்ட நதிகளில் அபாய கட்டத்தை தாண்டி வெள்ளம் பெருக்கெடுத்து ஓடுவதால் அணைகளில் இருந்து அதிகளவில் நீர் திறந்து விடப்பட்டது. இதன் காரணமாக மகாராஷ்டிரா மட்டுமின்றி கர்நாடக மாநிலத்தின் வட மாவட்டங்களான பெலகாவி உள்ளிட்ட மாவட்டங்கள் முற்றிலும் வெள்ளத்தில் மிதக்கின்றன. பெலகாவி நிப்பாணி தாலுகாவில் தேசிய நெடுஞ்சாலை, வெள்ளத்தில் அடித்து செல்லப்பட்டுள்ளது. கிராம சாலைகளும் நாசமாகி விட்டன.

வட கர்நாடகத்தில் உள்ள பெரும்பான்மை கிராமங்களும், நகரங்களும் வெள்ளத்தில் மிதக்கின்றன. ஹுப்பள்ளி அரசு மருத்துவமனை உள்ளே மழை நீர் புகுந்ததால், நோயாளிகள் அவதிப்படுகின்றனர். டாக்டர்கள் தண்ணீரில் நின்றபடி, நோயாளிகளுக்கு சிகிச்சை அளிக்கின்றனர்.

பெங்களூரு-புனே ரோடு முற்றிலும் ஸ்தம்பித்து விட்டதால் இவ்வழியே போக்குவரத்து நிறுத்தப்பட்டு விட்டது. வாகனங்கள் அணி வகுத்து நின்றன. மலைநாடு பகுதிகளான ஷிவமொக்கா, சிக்கமகளூரு உள்ளிட்ட மாவட்டங்களிலும் மழையின் சீற்றம் அதிகரித்துள்ளது. ஷிவமொக்கா உன்சூரு கிராமத்தில் திடீர் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டதால் மக்கள் மட்டும் இன்றி கால்நடைகளும் உயிரை கையில் பிடித்துக்கொண்டு பாதுகாப்பான இடங்களை தேடி சென்ற காட்சி மிகவும் உருக்கமாக இருந்தது.

கோவில், மருத்துவமனை, விவசாய நிலம் என ஒட்டு மொத்தமாக அனைத்து இடங்களிலும் தண்ணீர் மட்டுமே காணப்படும் நிலையில் மழையின் தாக்குதல் இன்னும் அதிகரிக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது. மகாராஷ்டிராவில் மழை குறைந்த பாடில்லை. கொய்னா உள்ளிட்ட அணைகளில் இருந்து 1 லட்சம் கன அடிக்கும் அதிகமாக தண்ணீர் திறந்து விடப்பட்டுள்ளதால் வட கர்நாடக பகுதிகள் தண்ணீர் தேசமாக மாறி விட்டன.

பெலகாவி மாவட்டத்தில் நேற்று ஒரே நாளில் 300க்கும் மேற்பட்ட வீடுகள் இடிந்து விழுந்தன. அது தவிர ஆயிரக்கணக்கான மரங்கள் மட்டும் இன்றி மின்சார கம்பங்கள் உள்ளிட்டவையும் சாய்ந்து விழுந்தன. ஒட்டு மொத்தமாக கர்நாடக மாநிலத்தின் வட மாவட்டங்கள், மலைநாடு பகுதிகளில் வயல் பகுதிகள் மட்டும் இன்றி எந்த பகுதியிலும் தண்ணீர் தண்ணீர் தண்ணீர்... இதை தவிர வேறு எதையும் காணமுடியவில்லை.

டெல்லி சென்றுள்ள முதல்வர் எடியூரப்பா கர்நாடக பவனில் ஆலோசனை நடத்தி வட கர்நாடக பகுதிகளில் மீட்பு பணி, நிவாரண உதவிகள் பாதிக்கப்பட்ட பகுதிகளுக்கு கிடைக்கிறதா? என்பதை அதிகாரிகளிடம் கேட்டறிந்தார்.