மதுரையில் தண்ணீர் பஞ்சமே இல்லை என கூட்டுறவு துறை அமைச்சர் செல்லூர் ராஜு கூறினார்.

கத்திரி வெயில் முடிந்து ஒரு மாதம் ஆகும் நிலையில், இன்னும் வெயில் குறைந்தபாடில்லை. அனல் காற்று வீசுவதால், பொதுமக்கள் வெளியே தலைக்காட்ட முடியாமல், வீட்டில் முடங்கி கிடக்கின்றனர். அதே நேரத்தில், வீட்டில் புழுக்கம் தாங்காமல் பலருக்கு பல்வேறு நோய்கள் ஏற்பட்டு, அவதியடைந்து வருகின்றனர்.

தமிழகம் முழுவதும் உள்ள 75 சதவீத ஏரிகள் ஆக்கிரமிப்பில் சிக்கியுள்ளது. அதனை அகற்ற அதிகாரிகள் கடந்த 2015ம் ஆண்டு முதல் நடவடிக்கை எடுத்து வருகிறார்கள். வந்து கொண்டே இருக்கிறார்கள். ஆனால், இதுவரை முடிந்தபாடில்லை. இதனால், தண்ணீர் இல்லாமல் மீதமுள்ள ஏரியின் பகுதிகள், வறண்டு பாலைவனம் போல் காட்சியளிக்கிறது.

கடந்த ஆண்டு மழை காலத்துக்கு முன், அந்தந்த மாவட்டங்களில் உள்ள ஏரிகள், குளங்களை தூர்வாரி சீரமைக்க அரசு உத்தரவிட்டது. அதன்பேரில் டெண்டர் விடப்பட்டு, வேலைகளும் நடந்தன. ஆனால், மழை பெய்யாமலேயே மதகுகள் உடைந்துவிட்டன. இதனால், மழை வரும்போது, தண்ணீர் சேமிக்க முடியாத நிலை ஏற்பட்டுள்ளது.

இந்நிலையில், அமைச்சர் செல்லூர் ராஜு, திருப்பரங்குன்றத்தில் செய்தியாளர்களை சந்தித்தார். அப்போது அவர் கூறியதாது.

மதுரை மக்களுக்கு தங்கு தடையின்றி குடிநீர் கிடைக்க உரிய நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது. மக்களின் பிரச்சனைகளை தீர்க்க, திமுக ஒருபோதும் முன்வரவில்லை. அவர்களின் ஆதாயத்துக்காகவே போராட்டம் நடத்துகிறார்கள்.

மதுரையில் குடிநீர் பிரச்சனை என்ற பேச்சுக்கே இடம் இல்லை. இதற்கு காரணம் முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி, சார்பில், அதிமுக தலைமை அனைத்து கோயில்களிலும் யாகம் வளர்க்க வேண்டும் என அறிவித்தது. அவரது அறிவிப்பின்படி, உடனே சென்னையில் மழை பெய்து விட்டது. இதே போன்று தமிழகம் முழுவதும் மழை பெய்து, மக்களின் குடிநீர் பிரச்சனை தீர்க்கும் என்றார்.