ஊழியர்களுக்கு ஜூன் மாதம் சம்பளம் கொடுக்க பணமே இல்லை என பிஎஸ்என்எல் நிறுவனம் தெரிவித்துள்ளது. இதனால், ஊழியர்கள் அதிர்ச்சியடைந்துள்ளனர்.

பிஎஸ்என்எல் நிறுவனத்தில் சுமார் 1.7 லட்சம் ஊழியர்கள் வேலை பார்க்கின்றனர். தற்போது, பிஎஸ்என்எல் நிறுவனம் மத்திய அரசிடம் அளித்துள்ள அறிக்கையில், சுமார் ரூ.13,000 கோடிக்கு நிலுவை தொகை வசூலிக்க முடியாததால், ரூ.850 கோடியை, ஜூன் மாத சம்பள தொகையை ஊழியர்களுக்கு வழங்க முடியவில்லை என கூறியுள்ளது.

அந்த அறிக்கையில், புள்ளி விபரத்தின்படி, 2008-09 நிதியாண்டில் தான் கடைசியாக ரூ.575 கோடி லாபம் ஈட்டப்பட்டது. அதன் பிறகு தொடர்ந்து வருவாய் படிப்படியாக சரிந்து, 2017-18 ம் ஆண்டில், எப்போதும் இல்லாத அளவுக்கு ரூ.22, 668 கோடி வருவாய் இருந்ததுது. 2018-1 ம் ஆண்டில் இந்நிறுவனத்தின் கடன்தொகை ரூ.14,000 கோடி ஆக உள்ளது.

2018 ம் ஆண்டு டிசம்பர் மாத இறுதியில் நஷ்ட தொகை ரூ.90,000 கோடியை தாண்டியது. அதிக ஊழியர்கள், மோசமான நிர்வாகம், தேவையற்ற தலையீடுகள், தாமதமான நவீனமயமாக்கல் திட்டங்கள் ஆகியவை பிஎஸ்என்எல் நிறுவனத்தின் நஷ்டத்துக்கு காரணம்.

மத்திய அரசு 5ஜி தொலைத்தொடர்பு ஏலத்துக்கு ஏற்பாடுகளை மேற்கொண்டு வரும் நிலையில், பிஎஸ்என்எல் நிறுவனம் தற்போது வரை 4ஜி ஸ்பெக்ட்ரம் சேவையை கூட அளிக்கவில்லை. சில மாதங்களுக்கு முன், பிஎஸ்என்எல்., நிலையை சரிசெய்வதற்காக பிரதமர் மோடி சில மாற்றங்களை கொண்டு வந்தார். ஆனாலும், அதற்கான தீர்வு ஏற்படவில்லை.

வருவாய் இல்லாத நிலையில், ஊழியர்களுக்கு சம்பளம் வழங்குவது பிஎஸ்என்எல் நிறுவனத்துக்கு பெரும் சவாலாக  உள்ளது என கூறப்பட்டுள்ளது.