நிவர் புயலால் கனமழை பெய்துவருவதால் பாதுகாப்பு கருதி சென்னையில் பிரதான சாலைகளான  தாம்பரம், போரூர், ஈசிஆர், ஓம்ஆர் போன்ற மூடப்பட்டுள்ளது.

வங்கக்கடலில் உருவான நிவர் புயல் அதி தீவிர புயலாக வலுப்பெற்றுள்ளது. நிவர் புயலானது சென்னையிலிருந்து 214 கி.மீ., புதுச்சேரியில் இருந்து 120 கி.மீ., கடலூரில் இருந்து 110 கி.மீ., தொலைவில் நிலை கொண்டுள்ளது. தற்போது 15 கி.மீ. வேகத்தில் நிவர் புயல் நகர்ந்து வருகிறது. புயல் காரைக்கால்-மாமல்லபுரம் இடையே புதுச்சேரிக்கு அருகில் இன்றிரவு முதல் நாளை அதிகாலைக்குள் கரையை கடக்கும். புயல் கரையை கடந்த பிறகு அதன் தாக்கம் 6 மணி நேரம் நீடிக்கும் என்று சென்னை வானிலை மையம் தெரிவித்துள்ளது. இதன்காரணமாக சென்னை, கடலூர் மாவட்டங்களில் பலத்த காற்றுடன் மழை வெளுத்து வாங்கி வருகிறது. 

புயலை எதிர்கொள்ள அரசு சார்பில் அனைத்து நடவடிக்கைகளும் தீவிரமாக எடுக்கப்பட்டுள்ளது. இந்நிலையில், சென்னையில் கனமழை பெய்து வருவதால் பாதுகாப்பு கருதி பிரதான சாலைகளான  எண்ணூர் விரைவு சாலை, மெரினா கடற்கரை , பெசன்ட் நகர் கடற்கரை, தாம்பரம், போரூர், ஈசிஆர், ஓம்ஆர் போன்ற சாலைகள் மூடப்பட்டுள்ளது. மறு அறிவிப்பு வரும் வரை பிரதான சாலைகள் மூடப்பட்டிருக்கும் என அறிவிக்கப்பட்டுள்ளது.

மேலும், இரவு 10 மணிக்கு மேல் சென்னைக்குள் வெளிமாவட்ட நபர்கள் வர தடை விதிக்கப்பட்டுள்ளது. மக்கள் வெளியே வர வேண்டாம். வீட்டிற்குள்ளேயே இருக்க வேண்டும் என அறிவுறுத்தப்பட்டுள்ளது.