இரவு நேர ஊடரங்கு காரணமாக சென்னையில் இரவு 10 மணி முதல் அதிகாலை 4 மணிவரை மின்சார ரயில் சேவை ரத்து செய்யப்படுவதாக அறிவிக்கப்பட்டுள்ளது. 

தமிழகத்தில் கொரோனா 2வது அலை பாதிப்பு ஜெட் வேகத்தில் உயர்ந்து வருகிறது. தினசரி பாதிப்பு 11,000ஐ நெருங்கி வருகிறது. அதேநேரத்தில் உயிரிழப்பு எண்ணிக்கையும் கணிசமாக உயர்ந்து வருகிறது. இந்நிலையில், கொரோனாவை கட்டுப்படுத்த ஏப்ரல் 20மட தேதி முதல் மறு உத்தரவு வரும் வரை இரவு நேர ஊரடங்கு அறிவிக்கப்பட்டுள்ளது. மேலும், ஞாயிற்றுக்கிழமைகளில் முழு ஊரடங்கு அமல்படுத்தப்படுவதாக தமிழக அரசு அறிவித்துள்ளது. 

இந்நிலையில், ஊரடங்கு அமலில் உள்ள நேரங்களில் பேருந்து சேவை ரத்து செய்யப்பட்டது. இதையடுத்து, சென்னை மின்சார ரயில் சேவையிலும் மாற்றம் ஏற்பட்டுள்ளது. 

இதுதொடர்பாக தெற்கு ரயில்வே நிர்வாகம் வெளியிட்டுள்ள அறிக்கையில்;- மின்சார ரயில்கள் இரவு 10 மணிக்கு மேல் இயக்கப்படாது. இரவு 10 மணி முதல் அதிகாலை 4 மணி வரை எந்த நிலையத்தில் இருந்தும் ரயில்கள் இயக்கப்படாது. முழு ஊரடங்கான ஞாயிற்றுக்கிழமைகளில் நான்கில் ஒரு பங்கு அளவிலேயே ரயில்கள் இயக்கப்படும். ஞாயிற்றுக்கிழமைகளில் முன்களப் பணியாளர்கள் மற்றும் அத்தியாவசிய பணியாளர்கள் மட்டுமே பயணிக்கலாம். வார நாட்களில் 434 புறநகர் ரயில்களும், ஞாயிற்றுக்கிழமைகளில் 86 ரயில்களும் இயக்கப்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது. இந்த நடைமுறை நாளை முதல் அமலுக்கு வரும் என்று கூறப்பட்டுள்ளது.