ஆத்தாடி குடிமகன் இவ்வளவு ரூபாய்க்கா குடிச்சிருக்காங்க... புத்தாண்டில் கல்லா கட்டிய அரசு..!
புத்தாண்டு தினத்தன்று தமிழகம் முழுவதும் உள்ள டாஸ்மாக் கடைகளில் ரூபாய் 137 கோடிக்கு மது விற்பனை செய்யப்பட்டுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.
புத்தாண்டு தினத்தன்று தமிழகம் முழுவதும் உள்ள டாஸ்மாக் கடைகளில் ரூபாய் 137 கோடிக்கு மது விற்பனை செய்யப்பட்டுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.
தமிழகத்தில் 5,300 டாஸ்மாக் கடைகள் உள்ளது. இந்த கடைகளின் மூலம் நாள் ஒன்றுக்கு ரூ.80 முதல் ரூ.90 கோடி வரையில் மதுவிற்பனை நடைபெறும். குறிப்பாக, புத்தாண்டு, பொங்கல், தீபாவளி போன்ற விழா நாட்களில் ரூ.240 கோடிக்கும் மேல் மதுவிற்பனை நடைபெறுவது வழக்கம். இந்நிலையில், கடந்த ஆண்டு கொரோனா ஊரடங்கினால் பெரும் பொருளாதார இழப்பை அரசு சந்தித்தது.
இதையடுத்து, மே மாதம் டாஸ்மாக் கடைகளை அரசு திறந்தது. கொரோனாவால் ஏற்பட்ட பொருளாதார இழப்பை சரிசெய்ய கடைகளில் விற்பனையை அதிகரிக்க வேண்டும் என டாஸ்மாக் நிர்வாகம் ஊழியர்களுக்கு அறிவுறுத்தி இருந்தது. இந்நிலையில், புத்தாண்டு தினத்தன்று தமிழகம் முழுவதும் உள்ள டாஸ்மாக் கடைகளில் ரூபாய் 137 கோடிக்கு மது விற்பனை செய்யப்பட்டுள்ளது.
தமிழகத்தில் அதிகபட்சமாக சென்னை மண்டலத்தில் ரூபாய் 34.55 கோடிக்கும், குறைந்தபட்சமாக சேலம் மண்டலத்தில் ரூபாய் 24.19 கோடிக்கும் மதுபானங்கள் விற்பனையாகியுள்ளது. அதேபோல், திருச்சி மண்டலத்தில் ரூபாய் 27.20 கோடிக்கும், மதுரை மண்டலத்தில் ரூபாய் 26.65 கோடிக்கும், கோவை மண்டலத்தில் ரூபாய் 25.22 கோடிக்கும் மதுபானங்கள் விற்பனையாகியுள்ளது. கடந்த இரு தினங்களில் மட்டும் தமிழகத்தில் உள்ள டாஸ்மாக் கடைகளில் ரூபாய் 296 கோடிக்கு மதுபானங்கள் விற்பனையாகியுள்ளது குறிப்பிடத்தக்கது.