தேன் நிலவுக்கு சென்ற  இடத்தி நேர்ந்த விபத்தில் மனைவியின் கண் முன்னேயே புதுமாப்பிள்ளை உயிரிழந்த சம்பவம் பெரும் சோகத்தை ஏற்படுத்தி உள்ளது.  சென்னை அமைந்தகரையைச் சேர்ந்தவர் அரவிந்த்.  இவருக்கும் பிரீத்தி என்பவருக்கும்  கடந்த வாரம் வெகு விமரிசையாக திருமணம் நடைபெற்றது.  இந்நிலையில் புதுமண தம்பதியர் தேனிலவுக்காக இமாச்சல பிரதேசம் சென்றனர்  அங்கு பல இடங்களை சுற்றிப் பார்த்த புதுமணத் தம்பதியர்,  பாராகிளைடிங் சுற்றுலா தளத்திற்கு சென்றனர். 

அங்கு தம்பதியர் இருவரும் பாராகிளைடிங்கில் பறக்க திட்டமிட்டனர்.  பின்னர்  பாராகிளைடிரில் மனைவி பிரீத்தி உயரே பறந்து பத்திரமாக கீழே இறங்கினார்.  இதை தொடர்ந்து அரவிந்த் பாராகிளைடரில் ஏறி உயரத்தில் பறந்தார் அப்போது திடீரென அவர் கட்டியிருந்த பாதுகாப்பு பெல்ட்  அறுந்தது  இதனால் செய்வதறியாது திகைத்த அரவிந்த் உயரத்தில் இருந்து கீழே விழுந்தார். அவர் விழுவதைக் கண்ட அவரது மனைவி அலறினார். ஆனால் கண்ணிமைக்கும் நேரத்தில் அவர் தரையில் மோதி சம்பவ இடத்திலேயே உயிரிழந்தார். இதைக்கண்ட பாராகிளைடிங் பைலட் ஹரி ராம் என்பவர்,  பாராகிளைடரை அவசரமாக  கீழே இறக்க முயன்றதில் அவரும் விழுந்து படுகாயம் அடைந்தார்.  தொடர்ந்து அவருக்கு மருத்துவமனையில் சிகிச்சைக்கு அளிக்கப்பட்டு வருகிறது. 

இது குறித்த தகவல் அறிந்த போலீசார் சம்பவ இடத்துக்கு சென்று அரவிந்தின் உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக மருத்துவமனைக்கு கொண்டு சென்றனர்.   அரவிந்தின் உடல் இமாச்சலப் பிரதேசத்தில் இருந்து டெல்லிக்கு கொண்டுவர ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. இந்த விஷயத்தைக் கேள்விப்பட்டு அவரது குடும்பத்தினர் பதறியடித்து டெல்லிக்கு புறப்பட்டு சென்றுள்ளனர்.  தேனிலவுக்கு சென்ற இடத்தில் புதுமாப்பிள்ளை உயிரிழந்துள்ள சம்பவம் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.