வரும் விநாயகர் சதுர்த்திக்கு விழாவுக்கு பசு சாணத்தில் செய்யப்பட்ட விநாயகர் சிலைகளைப் பயன்படுத்துமாறு பாஜக தேசிய செயலாளர் ஹெச். ராஜா கேட்டுக்கொண்டுள்ளார்.
இந்த ஆண்டு விநாயகர் சதுர்த்தி செப்டம்பர் 2-ம்  தேதி கொண்டாடப்படுகிறது. விநாயகர் சதுர்த்திக்காக விநாயகரின் சிலைகள் தயாரிக்கும் பணிகளும் தொடங்கியுள்ளன. வீடுகளில் களிமண்ணால் செய்யப்பட்ட விநாயகர் சிலைகளை வழிபாட்டுக்குப் பயன்படுத்துவது வழக்கம். விநாயகர் சதுர்த்தி முடிந்து பிறகு மூன்றாம் நாள், ஐந்தாம் நாள், ஏழாம் நாட்களில் அந்த சிலைகளை நீர்நிலைகளில் கரைத்துவிடுவார்கள்.
இந்நிலையில் இந்த ஆண்டு பசு சாணத்திலிருந்து செய்யப்பட்ட விநாயகர் சிலைகள் அறிமுகமாக உள்ளன. இந்த சிலைகளை டாக்டர் சுதர்சன் சிங் என்பவர் அறிமுகப்படுத்தியுள்ளார். இந்த பசு சாண சிலையை வடிவமைக்க ராஜாசிங் என்பவர் வழிகாட்டியிருக்கிறார். பசு சாணத்தில் செய்யப்பட்டுள்ள புகைப்படங்களையும் இவர்கள் வெளியிட்டுள்ளனர். பசு சாணத்தில்  விநாயகர் சிலை செய்யப்பட்டதற்கு பாஜக தேசிய செயலாளர் ஹெச். ராஜா பாராட்டு தெரிவித்துள்ளார்.
இதுகுறித்து அவர் ட்விட்டர் மற்றும் ஃபேஸ்புக் பக்கத்தில் வெளியிட்டுள்ள பதிவில், “நீர் மாசுபாட்டை முற்றிலும் தடுத்து, சுற்றுசூழலை பாதிக்காக பசு சாணத்திலிருந்து தயாரிக்கப்படுகின்ற விநாயகர் சிலைகளை அறிமுகபடுத்திய டாக்டர் சுதர்சன் சிங்கையும் அதற்கு வழிகாட்டிய ராஜாசிங் அவர்களையும் மனமார பாராட்டுகிறேன். மேலும் வரும் விநாயகர் சதுர்த்தி விழாவிற்கு அதிகளவிலே இதைப் பயன்படுத்துமாறும் கேட்டுக்கொள்கிறேன்.” என்று தெரிவித்துள்ளார்.