சென்னை மாநகராட்சியில் உள்ள மசாஜ் சென்டர்களை முறைபடுத்தும் நோக்கில் புதிய விதிமுறைகளை வகுக்க தமிழக அரசுக்கு உயர்நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

அதன்படி, அங்கீகரிக்கப்பட்ட கல்வி நிறுவனங்களில் படித்து முறையாக பயிற்சி பெற்றவர்களுக்கு மட்டுமே அனுமதி வழங்கப்படும். காலை 9 மணி முதல் இரவு 9 மணி வரை மட்டுமே மசாஜ் சென்டர்களை இயக்க அனுமதிக்கப்படும். மசாஜ் சென்டரில் சிசிடிவி கேமராக்கள் கட்டாயம் பொருத்தியிருக்க வேண்டும். ஏப்ரல் மாதம் முதல் புதிய விதிமுறைகள் நடைமுறைக்கு வரவுள்ளதாகவும், ஏப்ரல் 1ம் தேதி முதல் புதிய உரிமம் பெற விண்ணப்பிக்கலாம் எனவும் மாநகராட்சி அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.

மசாஜ் சென்டர் என்ற பெயரில் சட்டவிரோத செயல்கள் நடப்பதை தடுக்க உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என உயர்நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. அதோடு, பெருநகர சென்னை மாநகராட்சியில் செயல்பட்டு வரும் முடிதிருத்தும் நிலையங்கள், மசாஜ் சென்டர்கள், அழகு நிலையங்கள் கண்டிப்பாக தொழில் உரிமம் பெற வேண்டும் எனவும் உத்தரவிடப்பட்டுள்ளது.

 

இதுகுறித்து மாநகராட்சி அதிகாரிகள் கூறுகையில், ‘தொழில் உரிமம் பெறாமல் ஏப்ரல் 1-ம் தேதி முதல் முடி திருத்தும் நிலையங்கள், மசாஜ் சென்டர்கள், அழகு நிலையங்கள் செயல்பட முடியாது. இதுபோன்ற மையங்களில் சட்டவிரோத செயல்கள் நடப்பதை தடுக்க தொழில் உரிமம் வழங்கப்படுவதற்கு முன்பு போலீஸ் விசாரணையும் நடத்தப்பட உள்ளது. கதவுகள் மூடப்பட்ட நிலையில் மசாஜ் சென்டர்கள், அழகு நிலையங்கள் செயல்படக்கூடாது. மையங்கள் செயல்படும் நேரங்களில், கதவுகள் திறந்து வைக்கப்பட்டிருக்க வேண்டும். எந்த வகையான பாலியல் தொடர்பான செயல்களும் அனுமதிக்கப்பட மாட்டாது. தொழில் உரிமம் பெற குறிப்பிட்ட கட்டணம் நிர்ணயிக்கப்பட்டு உள்ளது’ என அவர் தெரிவித்தார்.