அரபிக் கடல் பகுதியில் நிலைகொண்டுள்ள காற்றழுத்த தாழ்வு மண்டலம் அடுத்த 48 மணி நேரத்தில் புயலாக வலுப்பெற வாய்ப்புது என வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.

இதுதொடர்பாக சென்னை வானிலை ஆய்வு மைய இயக்குனர் பாலச்சந்திரன் கூறுகையில்;- அரபிக் கடலில் திருவனந்தபுரம் அருகே நிலைகொண்டுள்ள காற்றழுத்த தாழ்வு மண்டலம், வரும் நாட்களில் லட்சத்தீவு நோக்கி நகர்ந்து புயலாக வலுப்பெற வாய்ப்பு உள்ளது. இதனால், தமிழகத்தில் தெற்கு, டெல்டா மற்றும் மேற்கு தொடர்ச்சி மலையை ஒட்டிய மாவட்டங்களில் ஓரிரு இடங்களில் கன முதல் மிக கனமழைக்கு வாய்ப்பு இருப்பதாக தெரிவித்தார்.

குமரிக் கடல் பகுதியில் நிலவும் காற்றழுத்த தாழ்வு மண்டலம் புயலாக மாறும் பட்சத்தில் அதற்கு மஹா என்று பெயர் சூட்டப்படும் என பாலச்சந்திரன் குறிப்பிட்டார். இதன் காரணமாக தமிழகத்தில் குமரி, நெல்லை, மதுரை, விருதுநகர்,  ராமநாதபுரம், புதுக்கோட்டை, கடலூர், புதுச்சேரி, திருச்சி, அரியலூர், பெரம்பலூர், கோவை, வேலூர், திருவள்ளூர், காஞ்சிபுரம், புதுச்சேரி, காரைக்கால் உள்ளிட்ட 20 மாவட்டங்களில் 2 நாட்களுக்கு கனமழை பெய்ய வாய்ப்பு உள்ளது.

கடல் கடும் சீற்றத்துடன் காணப்படுவதால் என்பதால் மீனவர்கள் மீன்பிடிக்க செல்ல வேண்டாம் என அறிவுறுத்தப்பட்டுள்ளது. வடகிழக்கு பருவமழையைப் பொருத்தவரையில் தமிழகம் மற்றும் புதுச்சேரியில் இயல்பு நிலையை விட 14 சதவீதம் அதிகம் பெய்துள்ளது. அக்டோபர் 1-ம் தேதி முதல் 30-ம் தேதி வரை இயல்பு அளவான 17 செ.மீ. பதில் 19 செ.மீ. வரை பெய்துள்ளது.

கடந்த 24 மணி நேரத்தில் அதிகபட்சமாக திருத்தணியில் 19 செ.மீ மழையும், ஆர்.கே. பேட்டையில் 15 செமீ மழையும், கலசப்பாக்கம், மணிமுத்தாறு, சோளிங்கரில் தலா 14 செமீ மழை பதிவாகி உள்ளது.