கொரோனா விதிகளை மீறுபவர்களுக்கு அபராதம் விதிக்க புதிய சட்டம் கொண்டு வர தமிழக அரசு முடிவு செய்துள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது.

தமிழகத்தில் கொரோனா பாதிப்பு நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது. சென்னையில் பாதிப்பு குறைந்து வந்தாலும் மற்ற மாவட்டங்களில் பாதிப்பு அதிகரித்து வருகிறது. கொரோனாவை தடுக்க அரசு தரப்பில் பல்வேறு நடவடிக்கை எடுத்து வந்த போதிலும் பொதுமக்களிடம் போதிய ஒத்துழைப்பு இல்லாததால் பாதிப்பு உயர்ந்த வண்ணம் உள்ளது. இதுவரை தமிழகத்தில் 3,79,385 பேர் கொரோனாவால் பாதிக்கப்பட்டுள்ளனர். உயிரிழந்தோர் எண்ணிக்கை 6,517 ஆக உயர்ந்துள்ளது. 

இந்நிலையில், கொரோனா விதிமுறைகள், கட்டுப்பாடுகளை மீறுபவர்களுக்கான தண்டனையை கடுமையாக்க புதிய சட்டம் கொண்டுவர தமிழக அரசு முடிவு செய்துள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது.

புதிய சட்டம் குறித்த விதிகள் அடங்கிய கோப்புகளை சட்டத்துறையிடம் ஒப்படைக்க சுகாதாரத்துறை முடிவு செய்துள்ளதாகவும்,  சட்டத்துறை முடிவெடுத்ததும் கொரோனா நோய் தடுப்புக்கான புதிய சட்டம் அமலுக்கு வரும் என தகவல் தெரிவிக்கின்றது. சுகாதாரத் துறை செயலர், பொது சுகாதாரத் துறை இயக்குனர் உள்ளிட்டோர் ஆலோசனையில் ஈடுபட்டு வருவதாக தகவல் வெளியாகி உள்ளது.