கண்ணுக்குத் தெரியாத எதிரியாக இருந்தால், நாம் மறைவாக இருப்பதுதான் விவேகமானது என்று கொரோனா குறித்து உயர்நீதிமன்ற தலைமை நீதிபதி ஏ.பி.சாஹி கூறியுள்ளார். 

கொரோனா வைரஸ் பாதிப்புக்கு இந்தியா முழுவதும் 38 பேர் உயிரிழந்துள்ளனர்.  வைரசால்  பாதிப்பு அடைந்தோரின் எண்ணிக்கை இன்று 1,720ஆக உயர்ந்து உள்ளது.  132 பேர் சிகிச்சை முடிந்து திரும்பியுள்ளனர். தமிழகத்தில் இதுவரை 234 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர். இதனிடையே கொரோனாவை கட்டுப்படுத்தும் நோக்கில் மத்திய மாநில அரசுகள் தீவிர முன்னெச்செரிக்கை நடவடிக்கைகள் மேற்கொண்டு வருகின்றன. அதன் அடிப்படியில் கொரோனா வைரஸ் பாதிப்பை கட்டுப்படுத்த நாடு முழுவதும் ஊரடங்கு உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது. இருப்பினும் பல இடங்களில் மக்களின் நடமாட்டம் அதிக அளவில் காணப்படுகிறது. இந்நிலையில் இந்தியாவின் பல பகுதிகளில் துணை ராணுவம் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டுள்ளது. 

இந்நிலையில், வெளியில் நடமாடுவதால் நமக்கு தெரியாமல் கொரோனா வைரஸ் வேகமாக பரவும் என சென்னை உயர்நீதிமன்ற தலைமை நீதிபதி எச்சரிக்கை விடுத்துள்ளார்.  பயணம் தொடங்கியது என்ற தலைப்பில் அவர் எழுதியுள்ள கடிதத்தில்;- கொரோனாவை குறைத்து மதிப்பிட்டதால் தான் வளர்ந்த நாடுகள் கடுமையாக பாதிக்கப்படுகின்றன. கண்ணுக்கு தெரியாத எதிரியாக இருந்தால் நாம் மறைவாக இருப்பதே விவேகமானது என்பதை உணர வேண்டும். 

தேவையின்றி வீட்டை விட்டு வெளியே வர வேண்டாம், மரணத்தை நேருக்கு நேர் சந்திக்கவேண்டாம். கொரோனாவுக்கு எதிரான போரில் அனைத்து தரப்பினரும் ஒத்துழைப்பு கிடைத்தாலும் வரும்காலம் கடினமாக இருக்கும். தனித்திருந்து மனதை அடக்கி வெற்றி காண்பதற்கு வேறெந்த வெற்றியும் ஈடாகாது என்று கூறியுள்ளார்.