அதிகாலையில் வீட்டிற்குள் புகுந்து செல்போன் திருடிய நேபாள நாட்டை சேர்ந்த வாலிபரை பொதுமக்கள் பிடித்து சரமாரியாக அடித்து உதைத்தனர்.

சென்னை ஆர்.ஏ.புரம் காமராஜர் சாலையை சேர்ந்தவர் ராஜேஷ்(28). இவர் ஓட்டல் ஒன்றில் வேலை செய்து வருகிறார். இந்நிலையில் நேற்று அதிகாலை 4.30 மணிக்கு மர்ம நபர் ஒருவர் ராஜேஷ் தங்கி இருந்த வீட்டிற்குள் புகுந்து செல்போனை எடுத்துக் கொண்டு தப்பி ஓட முயன்றார். அப்போது சத்தம் கேட்டு ராஜேஷ் திருடன் திருடன் என கத்தினார். உடனே அருகில் இருந்தவர்கள் தப்பி ஓடிய மர்ம நபரை பிடித்து சரமாரியாக அடித்து உதைத்தனர்.

இதுகுறித்து தகவல் அறிந்த அபிராமபுரம் போலீசார் சம்பவ இடத்திற்கு வந்து பொதுமக்களிடம் இருந்து வாலிபரை மீட்டு விசாரணை நடத்தினர். அப்போது, நேபாளம் காட்மண்டுவை சேர்ந்த ரமேஷ்(30) என்பதும், கடந்த 6 மாதங்களுக்கு முன்பு மயிலாப்பூரில் உள்ள ஓட்டலில் வேலை செய்த போது முறைகேடு செய்ததாக வேலையில் இருந்து நீக்கப்பட்டதும் தெரியவந்தது. பின்னர் சொந்த நாட்டிற்கு சென்ற அவர், கடந்த சனிக்கிழமை தான் சென்னைக்கு வந்தது விசாரணையில் தெரியவந்தது. அதைதொடர்ந்து ரமேஷை போலீசார் கைது செய்து அவனிடம் இருந்த செல்போனை பறிமுதல் செய்தனர்.