சென்னை டி.வி.எஸ். சுந்தரம் பாஸ்ட்னர்ஸ் தலைவர் நாராயணசாமி பாலகிருஷ்ணன் கொரோனா பாதிக்கப்பட்ட நிலையில் தனியார் மருத்துவமனையில் சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார். 

சீனாவின் பிறப்பிடமான கொரோனா வைரஸ் தமிழகத்தில் பெரும் பாதிப்பு மற்றும் உயிர் சேதத்தை ஏற்படுத்தி வருகிறது. குறிப்பாக சென்னை, செங்கல்பட்டு, திருவள்ளூர் ஆகிய மாவட்டங்களில் பாதிப்பு உச்சத்தை எட்டி வருகிறது. ஆனாலும், கொரோனா பாதிப்புகள் தொடர்கின்றன. இதுவரை சென்னையில் மட்டும் 39,641 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர். உயிரிழப்பு 559ஆக உயர்ந்துள்ளது. 

இந்நிலையில், டி.வி.எஸ். சுந்தரம் பாஸ்ட்னர்ஸ் குழுமத்தின் தலைவர் நாராயணசாமி பாலகிருஷ்ணனின் கார் ஓட்டுநருக்கு கொரோனா பாதிக்கப்பட்டது. இதனைத் தொடர்ந்து நாராயணசாமி பாலகிருஷ்ணனுக்கும் காய்ச்சல் மற்றும் சளி தொல்லை இருந்து வந்தது. இதனையடுத்து, ஆழ்வார்பேட்டையில் உள்ள காவேரி தனியார் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட அவருக்கு கொரோனா செய்யப்பட்டது. இதனையடுத்து, அவருக்கு கொரோனா உறுதி செய்யப்பட்டு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வந்தது. 

இந்நிலையில், சிகிச்சை பலனின்றி நாராயணசாமி பாலகிருஷ்ணன் உயிரிழந்தார். மேலும், நாராயணசாமி பாலகிருஷ்ணனின் மனைவிக்கும் கொரோனா உறுதி செய்யப்பட்டிருக்கிறது. அவருக்கு தற்போது தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. இந்த கொடூர கொரோனாவுக்கு இதுவரை முக்கிய பிரமுகர்களான திமுக எம்எல்ஏ ஜெ.அன்பழகன், பிரபல பாடகர் ஏ.எல்.ராகவன், விஜயா தனியார் மருத்துவமனை இயக்குநர் சரத்ரெட்டி ஆகியோர் உயிரிழந்துள்ளது குறிப்பிடத்தக்கது.