பொள்ளாச்சி பாலியல் கொடூர வழக்கில் கைது செய்யப்பட்டுள்ள நான்கு பேர் மீது போடப்பட்டுள்ள குண்டர் சட்டத்தை  அவர்கள் நான்கு மாதங்களில் உடைத்துவிட்டு வெளியே வந்துவிடுவார்கள் என்று பத்திரிகையாளர் நக்கீரன் கோபால் பரபரப்பாக குற்றம் சாட்டியுள்ளார்.
பொள்ளாச்சி பாலியல் கொடூர சம்பவம் தமிழகத்தையே அதிர்ச்சிக்குள்ளாக்கியுள்ளது. பாலியல் துன்புறுத்தலில் சிக்கிய பெண்களை கதற கதற  துடிக்கவிட்ட கயவர்களுக்கு எதிராக தமிழகமே பொங்கி எழுந்திருக்கிறது. குறிப்பாக பெண்கள் அலறும் வீடியோ ஆடியோவைக் கேட்டு பலரது மனமும் துடிதுடித்தது. இந்த வழக்கில் 4 பேர் கைது ஆகியுள்ளார்கள். அவர்களை குண்டர் சட்டத்தின் கீழ் கைது செய்து காவல் துறை நடவடிக்கை எடுத்துள்ளது. 
இந்தக் கொடூர சம்பவத்துக்கு எதிராக மக்கள் கொந்தளித்ததால், இந்த வழக்கை நேற்று பிற்பகலில் சிபிசிஐடிக்கு மாற்றி டிஜிபி ராஜேந்திரன் உத்தரவிட்டார். இந்த உத்தரவு பிறப்பித்த அடுத்த 4 மணி நேரங்களில் இந்த விவகாரத்தை சிபிஐ விசாரணைக்கு திடீரென மாற்றி தமிழக அரசு உத்தரவு பிறப்பித்தது.


இந்நிலையில், “குண்டர் சட்டத்தில் கைதாகியுள்ள 4 பேரும் இன்னும் 4 மாதங்களில் காலரை தூக்கிவிட்டுக்கொண்டு வெளியே வந்துவிடுவார்கள்” என்று பத்திரிகையாளர் நக்கீரன் கோபால் பரப்பரப்பாக குற்றம் சாட்டியுள்ளார்.
இதுபற்றி மேலும் அவர் கூறும்போது, “பொள்ளாச்சி பாலியல் கொடூரத்தை 4 பேருடன் முடிக்க காவல் துறை முயற்சி செய்கிறது. இப்போது இந்த 4 பேர் மீதும் குண்டர் சட்டம் போடப்பட்டுள்ளது. இந்தக் குண்டர் சட்டம் நிற்காது என சட்ட வல்லுநர்கள் கூறுகிறார்கள். ஒருவர் மீது ஏராளமான எப்.ஐ.ஆர். இருந்தால் மட்டுமே அந்தச் சட்டத்தைப் பயன்படுத்த முடியும். இவர்கள் மீது இந்த ஒரு வழக்கு மட்டுமே உள்ளது. அண்மைக் காலங்களில் போடப்பட்ட குண்டர் சட்டம் எதுவும் நீதிமன்றத்தில் நிற்கவில்லை. இந்த 4 பேரும் இன்னும் 4 மாதங்களில் காலரை தூக்கிவிட்டுக் கொண்டு வெளியே வந்துவிடுவார்கள். இதைத்தான் சம்பந்தப்பட்டவர்கள் எதிர்பார்க்கிறார்கள். அதுவரை இந்த 4 பேரும் வாயைத் திறக்காமல் பார்த்துக்கொண்டால் போதும் என்றே அவர்கள் நினைக்கிறார்கள்” என்று தெரிவித்தார்.