திமுக பொதுக்குழுவில் பாஜக அரசுக்கு எதிராக தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டதற்கு நயினார் நாகேந்திரன் கண்டனம் தெரிவித்துள்ளார்.

Nainar Nagendran Condemned DMK: மதுரையில் நேற்று திமுக பொதுக்குழு நடந்த நிலையில், மத்திய பாஜக அரசுக்கு எதிராக பல்வேறு தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன. தமிழ்நாட்டுக்கு நிதி தர மறுப்பது, வக்பு வாரிய சட்டத் திருத்ததை கொண்டு வந்தது. அமலாக்கத்துறை உள்ளிட்ட விசாரணை அமைப்புகளை கைப்பாவையாக பயன்படுத்தி எதிர்க்கட்சிகளை முடக்குவது ஆகியவற்றுக்காக மத்திய பாஜக அரசுக்கு திமுக பொதுக்குழுவில் கண்டன தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன.

பாஜக மீது பொய் பிரசாரம் மேற்கொள்ளும் திமுக‌

இந்நிலையில், தமிழ்நாடு பாஜக தலைவர் நயினார் நாகேந்திரன் திமுக பொதுக்குழு தீர்மானங்களை கண்டித்ததுடன் இது பாஜக அரசு மீதான பொய் பிரசாரம் என்று தெரிவித்துள்ளார். இது தொடர்பாக அவர் வெளியிட்ட அறிக்கையில், ''தொடர்ந்து மத்திய அரசு நிதி விஷயத்தில் தமிழகத்தை வஞ்சிக்கிறது என்ற உண்மையற்ற பிரச்சாரத்தை திமுக வைத்துக் கொண்டே வருகிறது. கடந்த மக்களவைத் தேர்தலின்போது மத்திய நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் குறிப்பிட்டதைப்போல 2014-ம் ஆண்டு முதல் வசூலிக்கப்பட்ட வரியைவிட அதிகமாக தமிழகத்துக்கு நிதி ஒதுக்கப்பட்டுள்ளது.

அனைத்து துறைகளுக்குமே அதிக நிதி

மேலும், திமுக அங்கம் வகித்த காங்கிரஸ் ஆட்சி காலத்தைவிட அனைத்து துறைகளிலும் அதிகமாக நிதி ஒதுக்கப்பட்டுள்ளது. அதன்படி, அனைத்து துறைகளுக்குமே அதிக நிதி ஒதுக்கப்பட்டுள்ளது என்பது உலகறிந்த உண்மை. குறிப்பாக கடந்த 11 ஆண்டுகளில் மட்டும் ரூ.10 லட்சம் கோடிக்கும் அதிகமாக நிதி பகிர்ந்தளிக்கப்பட்டுள்ளது. அரதப்பழசான போலி இந்தி திணிப்பு நாடகத்தை இன்னும் எத்தனை நாட்களுக்கு நடத்துவீர்கள்.

தொல்லியல் துறை மீது அரசியல் சாயம்

ஆயுதப்படைக்கான தேர்வுகளில் தொடங்கி மருத்துவ படிப்பு வரை தமிழ் மொழியில் கொண்டு வந்து உளமாற தமிழை போற்றும் பிரதமர் நரேந்திர மோடியின் அரசை அரசியல் தேவைகளுக்காக பழி சுமத்துவது முறையா, தமிழ் பொக்கிஷமாம் திருக்குறள் பெருமையை உலகெங்கும் எடுத்துச் செல்லும் மத்திய அரசு, தமிழ் விரோதமாக கீழடி ஆய்வை மறுக்கிறது என்பது அடிப்படையற்ற பொய். வழக்கமாக நிபுணர் குழு வழங்கும் திருத்தங்களை மேற்கொள்ளக் கூறிய தொல்லியல் துறை மீது அரசியல் சாயம் பூச முயற்சிப்பது அநியாயம்.

தமிழ்நாட்டில் புதிய ரயில்வே திட்டங்கள்

காங்கிரஸ் ஆட்சியில் திமுக அங்கம் வகித்தபோது, தமிழக ரயில்வே துறைக்கு ஓர் ஆண்டுக்கு சராசரியாக ரூ.800 கோடி மட்டுமே ஒதுக்கப்பட்டது. ஆனால், 2025-26 பட்ஜெட்டில் மட்டுமே 7.5 மடங்கு அதிகமாக ரூ.6,626 கோடி ஒதுக்கப்பட்டுள்ளது. அதுமட்டுமின்றி தமிழகத்தில் 1,302 கி.மீ. புதிய ரயில் தடங்கள் உருவாக்கப்பட்டு ரூ.33,467 மதிப்பிலான புதிய திட்டங்களும் செயல்படுத்தப்பட்டு வருகின்றன.

வக்பு திருத்தச் சட்டத்தை எதிர்ப்பது முறையா?

வக்பு வாரியத்தில் பெண்கள், ஷியா என அனைத்து முஸ்லிம்களுக்கும் பிரதிநிதித்துவம் வழங்கி, சிறுபான்மையினரின் உரிமைகளை நிலைநாட்டும் வக்பு திருத்தச் சட்டத்தை எதிர்ப்பது முறையா. அமலாக்கத் துறை, வருமானவரித் துறை போன்றவை எதிர்க்கட்சிகளுக்கு எதிரானவை என குற்றஞ்சாட்டும் திமுக, அவை மத்திய அரசின் ஆளுகைக்குள் வராத சுயாதீன அமைப்புகள் என்னும் அடிப்படையை நினைவில் கொள்ளாதது ஏன்.

திமுகவினரின் ஊழல்கள்

திமுகவினரின் ஊழல்கள் குறித்து, நியாயமாக பதியப்பட்ட புகார்களின் அடிப்படையில் விசாரணை செய்தால் அவற்றை பழிவாங்கும் நடவடிக்கை என்று கூறுவது திசை திருப்பும் நடவடிக்கையே. ஆக மத்திய அரசுக்கு எதிரான திமுகவின் தீர்மானங்கள் அனைத்தும், உண்மையை எதிர்கொள்ள முடியாத ஒருதலைபட்ச அரசியலின் வெளிப்பாடே ஆகும். எனவே, திமுக ஆட்சியின் தவறுகளை தேவையற்ற தீர்மானங்கள் மூலம் திரையிட்டு மறைக்க முயற்சித்தாலும், மக்கள் தீர்ப்பு 2026-ல் ஆணித்தரமாக ஒலிக்கும் என்பதில் எந்த சந்தேகமுமில்லை'' என்று தெரிவித்துள்ளார்.