நெல்லை மாவட்டம் அம்பாசமுத்திரம் அருகே இருக்கிறது கல்லிடைக்குறிச்சி நகரம். இங்கு குலசேகரமுடையார் சமேத அறம்வளர்த்த நாயகி அம்பாள் கோவில் இருக்கிறது. இது நூற்றாண்டு பழமையான கோவிலாகும்.

கடந்த 1982 ம் ஆண்டு இந்த கோவிலின் இரும்பு கதவு உடைக்கப்பட்டு அங்கிருந்த 800 ஆண்டுகள் பழமையான நடராஜர் சிலை கடத்தப்பட்டது. அப்போது பரபரப்பாக பேசப்பட்ட இந்த சிலை திருட்டு வழக்கு, பின்னர் 1984 ம் ஆண்டு சிலையை கண்டுபிடிக்க முடியவில்லை என்று கூறி முடித்து வைக்கப்பட்டது.

இந்த சிலை திருட்டு வழக்கை மீண்டும் கையிலெடுத்த பொன்.மாணிக்கவேல் தலைமையிலான குழு தீவிர விசாரணைகளுக்கு பிறகு ஆஸ்திரேலியாவில் இருக்கும் அருங்காட்சியத்தில் இருப்பதை கண்டுபிடித்தது. பின்னர் பல்வேறு சட்டப்போராட்டங்களை முன்னெடுத்து நடராஜர் சிலையை அங்கிருந்து மீட்டனர்.

அருங்காட்சியக அதிகாரி ராபின்சனின் சொந்த செலவில் ஆஸ்திரேலியாவில் இருந்து விமானம் மூலம் இந்தியா வந்தது நடராஜர் சிலை. பின்னர் அங்கிருந்து தமிழ்நாடு எக்ஸ்பிரஸ் மூலமாக இன்று காலை சென்னைக்கு கொண்டுவரப்பட்டது.

சென்னை ரயில்நிலையம் வந்த நடராஜர் சிலைக்கு சிறப்பு பூஜைகள் நடத்தப்பட்டன. குலசேகரமுடையார் கோவிலின் அர்ச்சகர் மற்றும் கல்லிடைக்குறிச்சி நகர பொதுமக்கள் திரளாக வந்திருந்து 37 ஆண்டுகளுக்கு பின் தமிழகம் திரும்பியிருக்கும் நடராஜர் சிலையை உற்சாகமாக வரவேற்றனர்.

இதுகுறித்து கூறிய பொன்.மாணிக்கவேல், நீதிமன்றத்தில் சிலை சமர்ப்பிக்கப்பட்ட பிறகு குலசேகரமுடையார் கோவிலில் கொண்டு சேர்க்கப்படும் என்றார்.

அரசின் சார்பாக எந்த வித ஒத்துழைப்பும் இன்றி ஒன்றரை வருட போராட்டத்திற்கு பிறகு நடராஜர் சிலை மீட்கப்பட்டதாக சிலை தடுப்பு பிரிவின் சார்பாக வெளியிடப்பட்ட அறிக்கையில் தெரிவிக்கப்பட்டிருந்தது குறிப்பிடத்தக்கது.