புதுவண்ணாரப்பேட்டையில் பிரபல ரவுடி வெட்டி படுகொலை செய்யப்பட்டது பரபரப்பை ஏற்படுத்தியது.

சென்னை புதுவண்ணாரப்பேட்டை, துறைமுகம் குடியிருப்பு வளாகத்தில் உள்ள காலி மைதானத்தில் வாலிபர் கழுத்து அறுக்கப்பட்ட நிலையில் இறந்து கிடப்பதாக கிடைத்த தகவல்படி, புதுவண்ணாரப்பேட்டை போலீசார் சம்பவ இடத்துக்கு விரைந்து சென்றனர். அங்கு கிடந்த சடலத்தை மீட்டு பிரேத பரிசோதனைக்கு அனுப்பினர். இதுபற்றி நடத்திய விசாரணையில் இறந்தவர் காசிமேட்டை சேர்ந்த பிரபல ரவுடி சுரேஷ் (எ) டகுல் சுரேஷ் (27) என தெரியவந்தது. இவர் மீது காசிமேடு மற்றும் வடசென்னை காவல் நிலையங்களில் அடிதடி, செயின் பறிப்பு, வழிப்பறி மற்றும் கொலை முயற்சி வழக்குகள் நிலுவையில் உள்ளன.

காசிமேட்டை சேர்ந்த பிரபல ரவுடி கார்த்திக் (எ) குள்ள கார்த்திக் (21) என்பவர் தலைமையிலான கும்பல்தான் சுரேஷை வெட்டிக்கொலை செய்தது விசாரணையில் தெரியவந்தது. இதையடுத்து, தமிழ்ச்செல்வன் என்பவரை சந்தேகத்தின்படி போலீசார் பிடித்து விசாரித்தனர். அதில் வியாசர்பாடி காவல் நிலையத்தில் செல்போன்திருட்டு வழக்கு சம்பந்தமாக டகுல்சுரேஷ் எங்கள் கூட்டாளிகளை போலீசில் மாட்டிவிட்டான். அதனால் சுரேஷை கொலை செய்ய திட்டம் தீட்டினோம்.

நேற்று முன்தினம் சுரேஷுக்கு மது வாங்கு கொடுத்து போதை ஏறியவுடன் துறைமுகம் குடியிருப்பு காலி இடத்துக்கு அழைத்து சென்று குள்ளக்கார்்த்தி மற்றும் நண்பர்களுடன் சேர்ந்து சுரேஷை அரிவாளால் வெட்டி கொலை செய்தோம். பின்னர் நாங்கள் வீட்டுக்கு சென்றுவிட்டோம். நேற்று காலை சம்பவ இடத்துக்கு சென்று பார்த்தோம். சடலம் அங்கேயே கிடந்தது. அதை செல்போனில் படம் எடுத்துவிட்டு இளையாமுதலி தெரு வழியாக பைக்கில் வரும்போது, தண்டையார்பேட்டை போலீசில் மாட்டிக்கிட்டோம். இவ்வாறு வாக்குமுலம் அளித்ததாக போலீசார் தெரிவித்தனர்.

பின்னர் தமிழ்ச்செவன் உட்பட 5 பேரை பிடித்து புதுவண்ணாரப்போட்டை போலீசார் விசாரித்துவருகின்றனர். மேலும் தலைமறைவாக உள்ள குள்ளக்கார்த்தி உட்பட பலரை போலீசார் தேடி வருகின்றனர்.