திருப்பதியில் 140 நாட்களுக்கு பிறகு கண்டுபிடிக்கப்பட்ட சுற்றுச்சூழல் ஆர்வலர் முகிலனை நாய் கடித்துள்ளதாகவும், சரியான உணவு இல்லாதால் அவரது உடல்நிலை பலவீனமாக உள்ளதாகவும் சிபிசிஐடி போலீசார் தகவல் தெரிவித்துள்ளனர்.

கடந்த பிப்ரவரி மாதம் 15-ம் தேதி சென்னை எழும்பூர் ரயில் நிலையத்தில் இருந்து சென்ற முகிலன் திடீரென காணமால் போனார். இதனைத்தொடர்ந்து பிப்ரவரி 18-ம் தேதி முகிலனை கண்டுபிடிக்கக்கோரி சென்னை உயர்நீதிமன்றத்தில் ஆட்கொணர்வு மனு தாக்கல் செய்யப்பட்டது. இதனையடுத்து, முகிலனை கண்டுபிடிக்கும் பணியில் சிபிசிஐடி போலீசார் தீவிரமாக ஈடுபட்டிருந்த நிலையில், ஆந்திர போலீசார் முகிலனை கண்டுபிடித்துள்ளனர். திருப்பதி ரயில் நிலையத்தில் முகிலனை போலீசார் அழைத்து சென்ற வீடியோவும் வெளியானது. 

பின்னர், முகிலனை தங்களிடம் ஒப்படைக்குமாறு தமிழக சிபிசிஐடி போலீசார், ஆந்திர போலீசாருக்கு வேண்டுகோள் விடுத்தனர். தமிழக போலீசாரின் வேண்டுகோளை ஏற்று தமிழகத்திற்கு அழைத்து வரப்பட்ட, முகிலனுக்கு வேலூர் அடுக்கம்பாறை அரசு மருத்துவமனையில் மருத்துவ பரிசோதனை நடத்தப்பட்டது. இதனைத்தொடர்ந்து, முகிலனை வஜ்ரவேல் தலைமையிலான தமிழக சி.பி.சி.ஐ.டி போலீசார் பத்திரமாக சென்னைக்கு அழைத்து வந்தனர். பின்னர், எழும்பூரில் முகிலனிடம் சிபிசிஐடி ஐஜி சங்கர் நேரில் விசாரணை நடத்தி வருகிறார். 

இந்நிலையில், முகிலனை நாய் கடித்துள்ளது சிபிசிஐடி விசாரணையில் தெரியவந்துள்ளது. அடுக்கம்பாறை மருத்துவமனையில் பரிசோதனை செய்ததில் நாய் கடித்த காயம் இருந்தது கண்டுபிடிக்கப்பட்டு உள்ளது.  நாய்க்கடிக்கு ஊசி போடப்பட்டு உள்ளது என்றும் சாப்பிடாத நிலையில் அவரது உடல் பலவீனம் அடைந்து காணப்படுவதாகவும் தகவல் வெளியாகியுள்ளது.