உலகம் முழுவதும் கொரோனா வைரஸ் கோர தாண்டவம் ஆடி வருகிறது. இந்தியாவிலும் கொரொனா பாதிப்பு நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது. இதுவரையிலும் 147 பேர் இந்தியாவில் கொரோனா பாதிப்பிற்கு உள்ளாகி இருக்கின்றனர். 125 இந்தியர்களும் 25 வெளி நாட்டவர்களும் கொரோனா பாதிப்படைந்து சிகிச்சை பெற்று வரும் நிலையில் இந்தியாவில் பலி எண்ணிக்கை 3 ஆக அதிகரித்துள்ளது. இதன் காரணமாக முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை தீவிரபடுத்துமாறு மாநில அரசுகளை மத்திய அரசு எச்சரித்திள்ளது. பல்வேறு மாநிலங்களில் பள்ளி, கல்லூரி, திரையரங்குகள் மற்றும் பொது மக்கள் கூடும் முக்கிய இடங்கள் அனைத்தும் முடப்பட்டுள்ளன.

தமிழகத்திலும் கொரோனா பாதிற்பிற்கான நடவடிக்கைகளை அரசு எடுத்து வருகிறது.  அதன்படி, தமிழகத்தில் இருக்கும் கல்வி நிறுவனங்கள், திரையரங்குகள், வணிக வளாகங்கள் ஆகியவை மார்ச் 31 ம் தேதி வரை மூடப்படுவதாக அறிவிக்கிப்பட்டுள்ளது. பொதுமக்கள் கூட்டமாக கூடுவதையும் தவிர்க்க வேண்டும் எனவும் அரசு அறிவுறுத்தி இருக்கிறது. சென்னை போன்ற முக்கிய நகரங்களில் பொதுமக்கள் கூடுவதை தவிர்க்கும் விதமாக பெரிய கடைகள் போன்றவையும் 31 ம் தேதி வரை அடைக்க நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.

பூட்டப்பட்ட கடைகள்

இந்த நிலையில் சென்னை தி.நகரில் 400க்கும் மேற்பட்ட கடைகள் அடைக்கப்பட்டுள்ளன. பெரிய கடைகள் அனைத்தும் கட்டாயம் அடைக்கப்பட வேண்டும் என கூறப்பட்டிருக்கும் நிலையில் சிறிய கடைகள் வழக்கம் போல திறக்கப்பட்டு கடைகளில் பணிபுரியும் ஊழியர்கள் வேலைக்கு வந்திருந்தனர். ஆனால், எந்த கடைகளையும் திறக்கக்கூடாது என்று மாநகராட்சி அதிகாரிகள் உத்தரவு பிறப்பித்தனர். இதையடுத்து ஊழியர்கள் அனைவரும் வீடுகளுக்கு திரும்பி சென்றனர். சிறிய கடைகள் வைத்திருப்போர் 31ம் தேதி வரை கடைகளை அடைத்தால் வாழ்வாதாரம் பாதிக்கப்படும் என முறையிட்டுள்ளதால் அதுகுறித்து இன்று மாலை அறிவிக்கப்பட இருக்கிறது. எப்போதும் பரபரப்பாக இயங்கும் தி.நகர் பகுதியில் அனைத்து கடைகளும் மூடப்பட்டுள்ளதால் ஆள் நடமாட்டம் இல்லாமல் வெறிச்சோடி காணப்படுகிறது.