தமிழ்மொழி குறித்த தவறான தகவலை போல பாடப்புத்தகங்களில் இருக்கும் குறைகளைக் கண்டறிந்து சரி செய்ய சிறப்புக்குழுவை அமைக்க வேண்டும் என தமிழக அரசுக்கு அமமுக பொதுச்செயலாளர் டிடிவி.தினகரன் வலியுறுத்தியுள்ளார்.  இதுகுறித்து அவர் நேற்று வெளியிட்ட அறிக்கை:

தமிழக அரசின் 12ம் வகுப்பு ஆங்கில பாடப்புத்தகத்தில் தமிழின் தொன்மையைக் குலைத்திடும் வகையில் இடம்பெற்றுள்ள பகுதி திருத்தப்படும் என்று அத்துறையின் அமைச்சர் கூறியிருக்கிறார். ஆனால், இத்தகைய பெரும் தவறுகள் இன்னும் எந்தெந்த பாடப்புத்தகங்களில் இடம்பெற்றிருக்கின்றன என்பது தெரியவில்லை. எனவே மாணவர்களுக்குப் பிழையான பாடங்கள் கற்பிக்கப்படுவதைத் தடுக்க சிறப்பு ஆய்வுக்குழுவை அமைக்க வேண்டும்.

அக்குழுவினர் தமிழ்நாடு அரசு தயாரித்திருக்கின்ற பாடப்புத்தகங்கள் அனைத்தையும் மீளாய்வு செய்து குறைகளைக் கண்டறிந்து சரி செய்வதற்கான ஏற்பாட்டினைச் செய்திட வேண்டும். மேலும், இப்படி பட்டவர்த்தனமாக வரலாற்றைத் திரித்து பாடங்களை தயாரித்தவர்கள், இனிமேல் அரசு சார்ந்த எந்தக் குழுக்களிலும் இடம்பெறுவதற்கு தடைவிதிக்க வேண்டும் எனவும் தமிழக அரசை வலியுறுத்துகிறேன்.

இவ்வாறு கூறியுள்ளார்.