சென்னை, காஞ்சிபுரம், திருவள்ளூர், செங்கல்பட்டு, கடலூர் ஆகிய பகுதிகளில் நள்ளிரவு வரை மழை நீடிக்கும். புயல் அருகில் இருக்கும் வரை மழை தொடரும் என்று தமிழ்நாடு வெதர்மேன் பிரதீப்ஜான் கணித்துள்ளார்.

மிக்ஜம் புயல் காரணமாக சென்னை உள்ளிட்ட வட மாவட்டங்களில் பெய்துவரும் மழை நிற்க நள்ளிரவு வரை காத்திருக்க வேண்டும் என்று தனியார் வானிலை ஆய்வாளர் தமிழ்நாடு வெதர்மேன் தெரிவித்துள்ளார்.

தமிழ்நாடு வெதர்மேன் மிக்ஜம் புயல் குறித்து சமீபத்தில் வெளியிட்டுள்ள அறிவிப்பில், புயல் இப்போது பொன்னேரி-ஸ்ரீஹரிகோட்டா பெல்ட் கடல் பகுதியில் உள்ளது என்றும் புயலுக்கு தெற்கிலும் மேற்கிலும் பெரிய மழை மேகங்கள் காணப்படுகின்றன என்றும் கூறியுள்ளார்.

"சென்னை, காஞ்சிபுரம், திருவள்ளூர், செங்கல்பட்டு, கடலூர் ஆகிய பகுதிகளில் நள்ளிரவு வரை மழை நீடிக்கும். புயல் அருகில் இருக்கும் வரை மழை தொடரும். இந்த புயல் நாளை நெல்லூர்-காவாலி பகுதிக்கு அருகில் கரையைக் கடக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது." என்றும் தெரிவித்துள்ளார்.

Scroll to load tweet…

அணையின் நீர்மட்டம் மற்றும் நீர் வரத்து

ரெட்ஹில்ஸ் உபரி நீர் 11.30 மணியளவில் 4000 கனஅடியாக இருந்தது. தற்போது 20.20 அடியாக உள்ளது. பூண்டி நீர்த்தேக்கத்தில் உபரி நீர் தற்போது 6000 கன அடியாகவும், நீர்வரத்து 17000 கன அடியாகவும் உள்ளது. செம்பரம்பாக்கம் ஏரியில் உபரி நீர் மதியம் 12.30 மணியளவில் 6000 கனஅடியாகவும், நீர்வரத்து 10000 கன அடியாகவும் உள்ளது. தற்போது நீர்மட்டம் 21.77 அடியாக உள்ளது. காலை 10.30 மணியளவில் சோழவரம் ஏரியில் உபரி நீர் 3000 கனஅடியாகவும், நீர்வரத்து 4000 கனஅடியாகவும் இருந்தது. நீர்மட்டம் தற்போது 18.01 அடியாக உள்ளது என்று தமிழ்நாடு வெதர்மேன் தெரிவித்துள்ளார்.

மழைப்பொழிவு புள்ளிவிவரங்கள்

மீனம்பாக்கம் விமான நிலையப் பகுதியில் கடந்த 30 மணி நேரத்தில் 380 மி.மீ மழை பதிவாகியுள்ளது. நுங்கம்பாக்கம் பகுதியில் மழையளவு 30 மணிநேரத்தில் 360 மி.மீ ஆகப் பதிவாகி இருக்கிறது என்று பிரதீப்ஜான் கூறியுள்ளார்.