சென்னை மாநகர போக்குவரத்து பணியாளர்கள் பணிக்கு திரும்ப மேலாண்மை இயக்குநர் அதிரடி உத்தரவு பிறப்பித்துள்ளார். 

தமிழகம் உள்ளிட்ட பல மாநிலங்களில் கொரோனா வைரஸ் கோரத்தாண்டவம் ஆடி வரும் நிலையில் நாளை 31ம் தேதி 4ம் கட்ட ஊரடங்கு நிறைவடைய உள்ளது. இந்நிலையில், 5ம் கட்ட ஊரடங்கை ஜூன் 1ம் தேதி முதல் 14ம் தேதி வரை ஊரடங்கு நீட்டிக்கப்படலாம் என்ற தகவல் வெளியாகியுள்ளது. ஒவ்வொரு முறையில் பிரதமர் மோடி மாநில முதல்வர்களுடன் ஆலோசித்து ஊரடங்கு நீட்டிப்பது தொடர்பாக முடிவு எடுத்து வந்தார். ஆனால், இந்த முறை ஊரடங்கு நீட்டிப்பது தொடர்பாக  மாநில அரசுகளே முடிவெடுத்து கொள்ளலாம் என்று கூறிவிட்டதாக தெரிகிறது. இது தொடர்பான அறிவிப்பு இன்று அதிகாரப்பூர்வமாக வெளியாக வாய்ப்புள்ளதாக கூறப்படுகிறது. 

இந்நிலையில்,  சென்னை மாநகரப் போக்குவரத்து கழகம் சார்பில் ஒரு அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது. அதில், மாநகரக் போக்குவரத்து கழகத்தால் இயக்கப்படும் 3584 பேருந்துகளில் அத்தியாவசிய பணிகளுக்காக இயக்கப்படும் சுமார் 300 பேருந்துகளை தவிர்த்து மற்ற அனைத்து பேருந்துகளும் கொரோனா தடுப்பு நடவடிக்கை காரணமாக பொதுமுடக்கம் செய்யப்பட்டுள்ளது.

அதனால் பணிமனைகளிலேயே நிறுத்தி வைக்கப்பட்டுள்ளது. அவ்வாறு நிறுத்தி வைக்கப்பட்டுள்ள பேருந்துகளில் 1775 பேருந்துகளில் எச்.எஃப்.சி மற்றும் எஃப்.சி ஆகியவை ஜூன் 2020க்குள்ளாக காலக்கெடு முடிவடைகின்றன. எனவே மேற்கண்ட பேருந்துகளை புதுப்பித்து ஆய்வு செய்து தகுதி சான்றிதழ் வாங்க வேண்டி உள்ளதால் எம்.டிசி(டபுள்யூ), எஃப்சி யூனிட்கள் மற்றும் ஆர்.சி யூனிட்களில் பணிபுரியும் பணியாளர்கள் இரண்டு நாளுக்கு ஒரு முறை (50% அடிப்படையில்) உடனடியாக பணிக்கு வரும்படி அறிவுறுத்தப்படுகிறார்கள்.

மேலும், முகக்கவசம் அணிவது, கையுறை கட்டாயம் அணிவது, கைகளை அடிக்கடி சோப் போட்டு கழுவுவது, தொழிற்கூடங்கள், பணி செய்யும் இடங்கள், கேண்டீன், ஓய்வறை, நேரக்காப்பாளர் அறை உள்ளிட்ட இடங்களில் 3 அடி தனிநபர் இடைவெளியை கடைபிடிப்பது போன்ற நெறிமுறிகளை கடைபிடிக்க வேண்டும். பணியாளர்களுக்கு உடல்நிலை சரியில்லை என்றால் முன் அனுமதி பெற்று விடுப்பு எடுத்துக்கொள்ளவும் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.